Last Updated:
ஆன்லைன் சூதாட்ட தடை விவகாரத்தில் ஆளுநர் ரவியின் நிலைப்பாட்டுக்கு மாறாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மாநில அரசுகளுக்கு தடை விதிக்கும் அதிகாரம் உள்ளது என தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ரவியின் நிலைப்பாட்டுக்கு மாறாக மத்திய அரசு கருத்து தெரிவித்துள்ளது.
ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் சில சூதாட்டத்தையும் தடை விதிப்பது குறித்து மாநில அரசுகளே சட்டம் இயற்றலாம் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ஆன்லைன் இணையதள சூதாட்ட தளங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய திமுக எம்.பி. தயாநிதி மாறன் தமிழ்நாடு அரசு ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்துள்ளதை சுட்டிக்காட்டினார். மேலும் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு எவ்வளவு காலம் தேவைப்படும் என்றும் கேட்டார்.
இந்தக் கேள்விக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர், ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்யும் சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு உள்ளது என்றும் சட்டம் இயற்றும் தார்மீக மற்றும் சட்டப்பூர்வ அதிகாரம் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார். கடந்த 2022-ல் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு ஆளுநர் ஒப்புதல் தராமல் மாநில அரசுக்கு உரிமை இல்லை என்று குறிப்பிட்டார். இந்த நிலையில் தற்போது மத்திய அமைச்சரே மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதாக கூறியுள்ளார்.
இதனிடையே, ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கு ஒன்றில் மதுபானம் விற்பனை தொடர்பாகவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இயற்றியதை எதிர்த்து தனியார் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஆன்லைன் சூதாட்டத்துக்கு நேரக்கட்டுப்பாடு தமிழ்நாட்டில் உள்ளதை தனியார் நிறுவனம் எதிர்த்து வாதிட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மாநில எல்லைக்குள் இருக்கும் மக்களை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சட்டம் கொண்டு வரலாமே என்றதுடன், தமிழ்நாட்டில் மது விற்பனைக்கு நேரக்கட்டுப்பாடுகள் இருப்பதையும் சுட்டிக்காட்டினர்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
March 28, 2025 6:51 AM IST
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம்.. ஆளுநரின் நிலைப்பாட்டுக்கு மாறாக மத்திய அரசு கருத்து!

