விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வாய்ப்பில்லை என மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக இந்தியாவில் நடத்தப்பட்டது. இதில் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 3,85,256 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக கூட்டணியின் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகன் 3,80,877 வாக்குகளைப் பெற்றதோடு, சுமார் 4,379 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட நடிகை ராதிகா படுதோல்வியடைந்தார்.

விஜய பிரபாகரன், ராதிகா மாணிக்கம் தாகூர்
இந்த நிலையில் விருதுநகர் மக்களவைத் தொகுதியின் தேமுதிக வேட்பாளரான விஜய பிரபாகரன், நேற்று முன்தினம் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் ஒரு கோரிக்கை மனு தாக்கல் செய்தார். அதில் மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்ததாக அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

விஜய பிரபாகரன்
அத்துடன் விருதுநகர் மக்களவை தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், மறுவாக்கு நடத்த வாய்ப்பில்லை என்று மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் தற்போது தகவல் தெரிவித்துள்ளனர்.
மக்களவைத் தேர்தல் குறித்து தேர்தல் முடிவுகள் குடியரசுத் தலைவரிடம் தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் தேர்தல் தொடர்பான ஆவணங்களை மீண்டும் எடுக்க முடியாது. தேர்தல் ஆணையம் விரும்பினாலும் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட முடியாது. மறுவாக்கு எண்ணிக்கை வேண்டும் என தோல்வியடைந்த வேட்பாளர் விரும்பினால் நீதிமன்றம் மூலம் மட்டுமே தீர்வு தேடிக் கொள்ள முடியும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியுள்ளனர். இது தேமுதிகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
