கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதாதள எம்எல்ஏ-வும், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனுமான ஹெச்.டி.ரேவண்ணாவுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.
பல்வேறு பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ரேவண்ணாவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிரஜ்வல் ரேவண்ணா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பான வீடியோக்கள் வெளியான நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணை கடத்தியதாக ரேவண்ணாவை காவல் துறையினர் கடந்த 4-ஆம் தேதி கைதுசெய்தனர். அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை நடத்தினர்.
இந்த சூழலில், ரேவண்ணாவின் ஜாமின் மனுவை விசாரித்த மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம், ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
5 லட்சம் ரூபாய் உத்தரவாத பத்திரம் வழங்க வேண்டும், வழக்கு தொடர்பான ஆவணங்களை அழிக்கக் கூடாது, சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனான எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3,000 வீடியோக்கள் கடந்த மாதம் 26 ஆம் தேதி வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை பிடிப்பதற்கு போலீசார் முயற்சி மேற்கொண்ட நிலையில் அவர் ஜெர்மனிக்கு தப்பியோடி விட்டதாக தகவல்கள் வெளிவந்தன.
அங்கிருந்து அவர் மற்ற சில நாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. எம்பி என்கிற அடிப்படையில் பிரஜ்வால் ரேவண்ணா தூதரக பாஸ்போர்ட் என்னும் சிறப்பு பாஸ்போர்ட்டை வைத்திருக்கிறார். இதன் மூலம் சில நாடுகளுக்கு அவரால் விசா இல்லாமலேயே செல்ல முடியும். மேலும் அவர் அந்த நாடுகளில் 30 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை தங்கலாம்.
இதன் காரணமாக பிரஜ்வாலை பிடிப்பதில் விசாரணை அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவரது தூதராக பாஸ்போர்ட்டை முடக்க வேண்டும் என்று எதிர் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

பாலியல் பலாத்காரம் பெண்ணை கடத்துவது கொலை செய்வது போன்றவை அரசியல்வாதிகளின் பொழுதுபோக்கு அரசியல் இதெல்லாம் சர்வ சகஜமாக நடந்து வருகிறது எனவே இதற்கு கமெண்ட் செய்ய விரும்பவில்லை