Last Updated:
தனது வீட்டில் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் தனக்கும் தொடர்பு இல்லை எனவும் தன்னை சிக்க வைக்க சதி நடப்பதாகவும் நீதிபதி யஷ்வந்த் வர்மா விளக்கமளித்திருந்தார்
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியின் வீட்டின் முன்பாக பண மூட்டைகள் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உச்சகட்ட பாதுகாப்பு வளையத்தில் உள்ள டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டின் அருகே குப்பையில் பாதி எரிந்த நிலையில் 500 ரூபாய் நோட்டுகள் கடந்த மார்ச் மாதம் கைப்பற்றப்பட்டிருந்தன. டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அரசு இல்லத்தில் மார்ச் 14 ஆம் தேதி இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்த போது, நீதிபதி வீட்டில் பொருட்கள் வைக்கும் ஸ்டோர் ரூமில் மூட்டை மூட்டையாக ரூபாய் நோட்டுகள் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டதாக தகவல் வெளியானது. இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா உத்தரவிட்டிருந்தார்.
நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக எரிந்த நிலையில் கிடந்த ரூபாய் நோட்டுகள் தொடர்பாக டெல்லி காவல்துறை வழங்கிய வீடியோவும் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அவற்றை உச்ச நீதிமன்றம் வெளியிட்டது. இதன்மூலம் நீதிபதியின் வீட்டில் பணம் கைப்பற்றப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
தனது வீட்டில் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் தனக்கும் தொடர்பு இல்லை எனவும் தன்னை சிக்க வைக்க சதி நடப்பதாகவும் நீதிபதி யஷ்வந்த் வர்மா விளக்கமளித்த நிலையில், இந்த விவகாரம் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நியமித்திருந்தார். விசாரணை முடியும் வரை, யஷ்வந்த் வர்மாவுக்கு எந்த பணியும் ஒதுக்க வேண்டாம் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மூவர் குழுவானது விசாரணை அறிக்கையை நேற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் தாக்கல் செய்துள்ளது. இதனை உச்ச நீதிமன்றம் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.
நீதிபதியின் வீட்டின் முன் பண மூட்டைகள் கைப்பற்றப்பட்ட விவகாரம்.. உச்சநீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல்

