Last Updated:
தெலங்கானா மாநிலத்தில், மனைவியை அழைத்து செல்ல முயன்ற கௌதம், மாமியார் குடும்பத்தினரால் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்யப்பட்டார்.
தெலங்கானா மாநிலம், பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி வெங்கடேஷ்வர்லு – அனுராதா. இந்த தம்பதியின் மகள் காவ்யா. இவர், தண்டலபோரு கிராமத்தைச் சேர்ந்த பல்லேம் கௌதம் என்பவரை காதலித்து வந்துள்ளார். இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கௌதம் – காவ்யா ஜோடிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், பி.டெக் முடித்த கௌதம் எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வந்துள்ளார். சுஜாதாநகரில் உள்ள வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்த போது, 5 மாதங்களுக்கு முன்பு தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமை இழந்த காவ்யா, கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில், தனது மனைவியை சமாதானம் செய்து, தன்னுடன் அழைத்து வர கௌதம் தனது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால், வீடு தேடி வந்த மருமகனை மாமியார், மாமனார் மற்றும் குடும்பத்தினர் உள்ளே அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. அப்போது, கௌதம் உடன் பெண் வீட்டார் வாக்குவாதம் செய்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : “மகா கும்பமேளா அரசு நிகழ்ச்சி அல்ல.. அது ஒரு சமூகத்தின் நிகழ்ச்சி” – எதிர்க்கட்சிகள் விமர்சனத்திற்கு யோகி ஆதித்யநாத் பதில்
அதை பொருட்படுத்தாமல் அவர் தனது மனைவியை அழைத்துச் செல்வதில் உறுதியாக இருந்துள்ளார். ஆத்திரமடைந்த காவ்யாவின் குடும்பத்தினர், கௌதம் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு, வீட்டிற்குள் சென்று கதவைப் பூட்டியுள்ளனர். உடலில் தீப்பற்றியதால் கதறி துடித்த கௌதம், அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் குதித்துள்ளார்.
இதில், படுகாயமடைந்தவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, கம்மம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக வாரங்கல் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக கௌதமின் பெற்றோர், போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், கௌதமின் மனைவி காவ்யா, அவரின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணை முடிவில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
February 19, 2025 10:02 PM IST

