டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மாவிடம் வெற்றி வாய்ப்பை இழந்து உள்ளார். டெல்லி முதலமைச்சர் பதவிக்கு இவரது பெயரையும் பாஜக பரிசீலிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தேர்தல் ஆணைய வலைத்தளம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 30088 வாக்குகளை பெற்று பர்வேஷ் வர்மா வெற்றி பெற்று உள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் 25999 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்து உள்ளார். மூன்றாம் இடத்தை பிடித்து உள்ள காங்கிரஸ் கட்சியின் சந்தீப் தீக்ஷித் 4568 வாக்குகளை பெற்று உள்ளார். நோட்டாவுக்கு 314 வாக்குகள் கிடைத்து உள்ளது.
யார் இந்த பர்வேஷ் வர்மா?
நவம்பர் 7, 1977 இல் பிறந்த பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா அரசியல் குடும்ப பின்னணியைச் சேர்ந்தவர். ஆர்.கே. புரத்தில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளியில் பள்ளிக்கல்வியையும், டெல்லி பல்கலைக்கழகத்தின் கிரோரி மால் கல்லூரியில் உயர்கல்வியையும் பயின்றார். ஃபோர் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டத்தையும் அவர் பெற்றுள்ளார்.
முன்னாள் டெல்லி முதல்வரும் மூத்த பாஜக தலைவருமான சாஹிப் சிங் வர்மாவின் மகனான பர்வேஷ், தேசிய தலைநகரில் மிகவும் செல்வாக்கு மிக்க அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது மாமா ஆசாத் சிங், வடக்கு டெல்லி மாநகராட்சியின் மேயராகப் பணியாற்றினார், மேலும் 2013 சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் முன்ட்கா விதான் சபா தொகுதியில் போட்டியிட்டார்.
வர்மா முதன்முதலில் 2013 ஆம் ஆண்டில் டெல்லி சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவர் மெஹ்ராலி தொகுதியில் போட்டியிட்டு, அந்த நேரத்தில் டெல்லி விதான் சபாவின் தற்போதைய சபாநாயகராக இருந்த காங்கிரஸ் போட்டியாளரான யோகானந்த் சாஸ்திரியை தோற்கடித்தார்.
2014, 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வென்று எம்பி ஆன வர்மா, 2024 தேர்தலில் போட்டியிடாமல் இருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்கான கூட்டுக் குழுவின் உறுப்பினராகவும், நகர்ப்புற மேம்பாட்டிற்கான நிலைக்குழுவின் உறுப்பினராகவும் அவர் பணியாற்றி உள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் நெருக்கமான் தொடர்பை கொண்டுள்ள வர்மா, சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு பெயர் பெற்றவர். 2020ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது அரவிந்த் கெஜ்ரிவாலை “பயங்கரவாதி” என்று அழைத்ததைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தால் 24 மணி நேரம் பரப்புரை செய்ய தடை செய்யப்பட்டார்.


அரவிந்த் கெஜ்ரிவாலின் தோல்வி எதிர்பாராதது. ஆழ்ந்த வருத்தங்கள்