தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், பிகார் ஆகிய மாநிலங்களில் மிக அதிக அளவிலான தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகளுக்கு காங்கிரஸ் விட்டுக்கொடுத்திருக்கிறது. இந்த நான்கு மாநிலங்களில் மட்டுமே 201 தொகுதிகள் இருக்கின்றன.
உத்தரப் பிரதேசத்தில்தான் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. 2019 தேர்தலில் மாநிலத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 67 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், ஒரே தொகுதியில் – ராய் பரேலியில் மட்டும்தான் வெற்றி பெற்றது.
இந்த முறையும் அகிலேஷ் யாதவின் சமாஜவாதி கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ், தற்போது அமேதி, ராய் பரேலி உள்பட 17 தொகுதிகளில் மட்டும்தான் போட்டியிடுகிறது. கடந்த தேர்தலில் சோனியா காந்தி வெற்றி பெற்ற ராய் பரேலியில் இந்த முறை – வயநாடு தவிர்த்த இரண்டாவது தொகுதியாக – ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ், 42 தொகுதிகளில் 14 தொகுதிகளில் மட்டும்தான் போட்டியிடுகிறது. கடந்த தேர்தலில் 40 தொகுதிகளில் போட்டியிட்டாலும் இரு தொகுதிகளில் மட்டும்தான் வெற்றி பெற முடிந்தது.
மகாராஷ்டிரத்தில் 48 தொகுதிகள். 17 தொகுதிகளில்தான் காங்கிரஸ் போட்டியிடுகிறது. 21 தொகுதிகளை உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனைக்கும் 10 தொகுதிகளை சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸுக்கும் விட்டுக்கொடுத்திருக்கிறது. கடந்த இரு தேர்தல்களில் முறையே 25, 26 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது.
இதுபோலவே தில்லியிலும் ஹரியாணாவிலும் குஜராத்திலும் இந்தியா கூட்டணியிலுள்ள ஆம் ஆத்மி கட்சிக்குக் கணிசமான தொகுதிகளை காங்கிரஸ் விட்டுக்கொடுத்துள்ளது.
மூன்றாம் கட்ட வாக்குப் பதிவுடன் மக்களவையின் 283 தொகுதிகளுக்கான தேர்தல் முடிந்துவிட்டது. வரும் மே 13 ஆம் தேதி நாலாவது கட்டமாக 96 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. அத்துடன் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 381 தொகுதிகளில் தேர்தல் முடிந்துவிடும். அடுத்தடுத்த மூன்று கட்டங்களில் – மே 20, மே 25, ஜூன் 1 -ல் 49, 57, 57 தொகுதிகளுக்கு மட்டுமே வாக்குப் பதிவுகள் நடைபெற வேண்டியிருக்கும்.
எல்லாம் முடிந்த பிறகு அனைத்துத் தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ல் நடைபெறவுள்ளது.
