Last Updated:
டெல்லியில் நடைபயிற்சிக்குச் சென்ற தமிழ்நாடு எம்.பி சுதாவின் நகையை மர்மநபர்கள் பறித்துச் சென்றனர். சுதாவிற்கு காயம் ஏற்பட்டது. காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் காலையில் நடைபயணம் மேற்கொண்ட தமிழ்நாட்டு எம்.பி சுதாவிடம் கழுத்தில் இருந்த நகையை ஸ்கூட்டியில் வந்த மர்மநபர்கள் பறித்து சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் எம்.பி சுதாவிற்கு கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்றுள்ள எம்.பி. சுதா உள்துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்று அளித்துள்ளார். அதில் இன்று காலை 6.15 மணிக்கு தான் நடை பயிற்சி சென்றபோது தங்க நகை பறிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். தான் தங்கியுள்ள தமிழ்நாடு இல்லத்தில் இருந்து மற்றொரு எம்.பி. சல்மாவுடன் காலையில் நடை பயிற்சி சென்றதாகவும், அப்போது ஸ்கூட்டியில் அடையாளம் தெரியாத நபர் ஹெல்மெட் உடன் வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்பாராத நேரத்தில் தனது கழுத்தில் இருந்த 4 சவரன் நகையை அந்த நபர் பறித்ததாகவும், அதனால் தனக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ள சுதா, தனது சுடிதார் கிழிந்ததாகவும் தெரிவித்துள்ளார். கீழே விழாமல் தான் சுதாகரித்துக் கொண்ட நிலையில் இருவரும் சேர்ந்து உதவிக்காக அழைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். சிறிதுநேரம் கழித்து ரோந்து வந்த காவலர்களிடம் புகார் அளித்ததாக தெரிவித்துள்ள எம்.பி. சுதா, பலத்த பாதுகாப்பு உள்ள சாணக்யபுரி பகுதியில் தன்னிடம் நகை பறிக்கப்பட்டது அதிர்ச்சி அளிப்பதாகவும் கூறியுள்ளார்.
August 04, 2025 8:55 AM IST


