சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்துள்ளதை எதிர்த்து அவரது தாயார் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ஆள்கொணர்வு மனு இன்று(செப்.25) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் முந்தைய விசாரணையின்போது தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று தமிழக அரசு தரப்பில் வாதிடுகையில், சவுக்கு சங்கர் கஞ்சா பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த வழக்கில் குண்டர் சட்டத்தில் அவர் மீது பதியப்பட்டுள்ள வழக்கு திரும்பப் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சவுக்கு சங்கர் மீது வேறு வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லையெனில் அவரை ஜாமீனில் விடுவிக்கவும் உத்தரவிட்டு ஆள்கொணர்வு மனு மீதான விசாரணையை முடித்து வைத்துள்ளது உச்சநீதிமன்றம்.
