Last Updated:
கொல்கத்தா அரசு சட்டக் கல்லூரியில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரத்தால் மேற்குவங்கத்தில் போராட்டங்கள் வலுத்துள்ளன.
கொல்கத்தாவில் அரசு சட்டக் கல்லூரிக்குள் மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் கல்லூரி பாதுகாவலரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெற்கு கொல்கத்தா சட்டக் கல்லூரியில் ஜூன் 25-ஆம் தேதி கல்விப் படிவம் நிரப்ப வேண்டுமென கூறப்பட்டதால் முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் பாதுகாவலர் அறைக்கு வந்தபோது அவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
முன்னாள் சட்ட மாணவர் மோனோஜித் மிஸ்ரா மற்றும் தற்போதைய மாணவர்கள் இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இச்சம்பத்தைக் கண்டித்து போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இவ்வழக்கில் ஏற்கெனவே மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது கல்லூரி பாதுகாவலரும் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமையை சம்பந்தப்பட்ட நபர்கள் செல்போனில் வீடியோ எடுத்ததும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
இதனிடையே பாலியல் குற்றம் நடந்த இடத்துக்கு பாதிக்கப்பட்ட மாணவி நேரில் வரவழைக்கப்பட்டு, குற்றச்சம்பவ நிகழ்வுகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. காவல் உதவி ஆணையாளர் தலைமையிலான ஐந்து பேர் அடங்கிய சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
June 29, 2025 8:09 AM IST

