”தார்மிக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தோற்றுவிட்டார் மோடி” என்று காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின், செய்தியாளர்களுடன் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, 3வது முறையாக பிரதமராகப் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடியை விமர்சித்துள்ளார்.
சோனிய காந்தி கூறியதாவது, மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எதிர்பார்த்த இடங்களில் வெற்றி பெற முடியவில்லை. 400 இடங்களில் வெற்றி பெறும் எனக் கூறி வந்த மோடி, தோல்விக்கு பொறுப்பேற்று தலைமை பதவியிலிருந்து விலக வேண்டும், மாறாக அவர் மீண்டும் பிரதமராக நாளை(ஜூன் 9) பதவியேற்கும் முனைப்பில் உள்ளார்.
மோடி தான் கூறியபடி வெற்றியை பெறவில்லை. அவர் தார்மிக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தோற்றுவிட்டார். இதன்மூலம், தலைவராகும் தகுதியை, உரிமையை இழந்துவிட்டார். அவர் தனது அரசியல் நிலைப்பாட்டில் மாற்றம் செய்துகொள்வார் என்றோ, மக்களின் மனநிலையைப் புரிந்து நடப்பார் என்றோ நாம் எதிர்பார்ப்பது தவறு.
