சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ், கடந்த 2022-ல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது சேலம் காவல் ஆணையரிடம் ஒரு புகாரளித்திருந்தார். அந்தப் புகாரில், `2022-ல் தீபாவளியின்போது அண்ணாமலை யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டி கொடுத்திருந்தார். அதில், `இந்து கலாசாரத்தை அழிப்பதற்காக, தீபாவளியன்று பட்டாசு வெடிக்கக் கூடாது என கிறிஸ்துவ மிஷனரி தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கின்றன” என்று கூறியிருந்தார். இதை ஆராய்ந்தபோது, உச்ச நீதிமன்றத்தில் அவ்வாறு வழக்கு போட்டது அர்ஜுன் கோபால் என்றும், அவர் இந்து சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிந்தது.

அண்ணாமலை வேண்டும் என்றே இரு மதத்தினர் இடையே மோதலை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பொய்யான தகவலைப் பரப்பியிருக்கிறார். எனவே, அவர்மீதும், அந்த வீடியோவை ஒளிபரப்பிய சேனல் நிர்வாகி மீதும் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் (IPC) 153, 505 (3), 120 ஏ, சி.ஆர்.பி.சி பிரிவு 156 (3), 200 ஆகியவற்றின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பியூஸ் மானுஷ் தெரிவித்திருந்தார்.
ஆனால், காவல்துறை விசாரிக்க மறுக்கவே, நேராக சேலம் நீதிமன்றத்தில் அவர் வழக்குத் தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கு IPC 153, 505-க்கு கீழ் வருவதால் அரசிடமிருந்து விசாரணை அனுமதி பெறவேண்டும் என்று கூறவே, மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பினார் பியூஷ் மானுஷ்.
