கடுமையான குளிர் மற்றும் பனிப்பொழிவு இருந்தபோதிலும், உள்ளூர் மக்களுக்காக இராணுவம் பல்வேறு விளையாட்டு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்து வருகிறது. இந்த முறை, பனி கிரிக்கெட் போட்டிகள் களைக்கட்டி வருகின்றன. இதில் எட்டு அணிகள் பங்கேற்றுள்ளன.
குரேஸில் உள்ள கிரிக்கெட் ஆர்வலர்கள், பூஜ்ஜியத்திற்கும் குறைவான வெப்பநிலையிலும், பனி குவியல்களுக்கு மத்தியிலும் கூட, விளையாட்டு மீதான தங்கள் அன்பைக் கைவிட மறுக்கிறார்கள். எல்லை கிராமத்தைச் சேர்ந்த இந்த ஆர்வமுள்ள வீரர்கள், குரேஸை ஒரு முதன்மையான குளிர்கால சுற்றுலாத் தலமாக மாற்றும் நோக்கில், பனி போர்த்திய மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுகின்றனர்.
உறைபனி வெப்பநிலையில், அதுவும் பனியில் கிரிக்கெட் விளையாடுவது சிலிர்ப்பூட்டும் அனுபவமாகும். இந்த நிகழ்வின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, போட்டி பரவலான கவனத்தைப் பெற்றது. உலகெங்கிலும் உள்ள சர்வதேச கிரிக்கெட் வீரர்களும் இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பாராட்டி பகிர்ந்துள்ளனர்.
இந்த ஆண்டு, குரேஸில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஸ்ரீநகருக்கும், குரேஸுக்கும் இடையிலான சாலை மூடப்பட்டுள்ளது. குளிர்கால மாதங்களில் பெரும்பாலும் போக்குவரத்தின்றி காணப்படும் இப்பகுதியில் சுற்றுலா மற்றும் குளிர்கால விளையாட்டுகளை மேம்படுத்துவதற்காக இந்திய ராணுவத்தால் இந்தப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உள்ளூர் கிரிக்கெட் வீரரான ஜாகிர் உசேன் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டு, “இந்தப் போட்டியை இந்திய ராணுவம் உள்ளூர் மக்களின் ஆதரவுடன் ஏற்பாடு செய்துள்ளது. அரசாங்கமும் இது போன்ற நிகழ்வுகளை ஏற்பாடு செய்தால், குரேஸை ஒரு முக்கிய சுற்றுலா தலமாக உருவாக்க முடியும். இந்தப் பகுதி அதிக அங்கீகாரத்தையும், சுற்றுலாவையும் பெற இது போன்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்குமாறு நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்” என்கிறார்.
இதையும் படிக்க: Ganga Water | கங்கை நீரை எடுத்து ஆய்வு செய்தவருக்கு காத்திருந்த ஆச்சரியம்.. இப்படி ஒரு அதிசயமா..!
கடும் பனிப்பொழிவு காரணமாக குரேஸ் நகரம் காஷ்மீரின் பிற பகுதிகளிலிருந்தும், நாட்டிலிருந்தும் பல மாதங்களாக துண்டிக்கப்படுகிறது. இருப்பினும், இந்திய இராணுவம் இப்பகுதியில் பல குளிர்கால விளையாட்டு முயற்சிகளைத் தொடங்கியுள்ளதால், இது உள்ளூர் மக்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கும், சாகச சுற்றுலாவை ஊக்குவிப்பதற்கும் ஒரு ஸ்கை பயிற்சி பட்டறையும் நடத்தப்பட்டது.
இது போன்ற நிகழ்வுகளை ஏற்பாடு செய்ததற்காக குரேஸ் பகுதி இளைஞர்கள் இந்திய ராணுவத்திற்கு மிகுந்த நன்றியுள்ளவர்களாக உள்ளனர். இந்த நடவடிக்கைகள் இளம் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது மட்டுமல்லாமல், பிராந்தியத்தை மேம்படுத்தவும், அதிக சுற்றுலாவாசிகளை ஈர்க்கவும் உதவுகின்றன.
“இந்திய ராணுவம் இளைஞர்களை ஈடுபடுத்துவதற்காக இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்கிறது. அவர்களின் முயற்சிகளுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இளம் வீரர்களை ஆதரிக்க அவர்கள் பரிசுத் தொகையையும் வழங்குகிறார்கள். குரேஸ் ஒரு சுற்றுலா தலமாக பிரபலமடைய இதுபோன்ற நடவடிக்கைகள் மேலும் நடைபெறும் என்று நாங்கள் நம்புகிறோம்” என மற்றொரு உள்ளூர் கிரிக்கெட் வீரரான ஜாஹித் அகமது தனது பாராட்டுகளைப் பகிர்ந்து கொண்டார்.
இதையும் படிக்க: பிரதமர் மோடியின் முதன்மை செயலராக நியமிக்கப்பட்ட சக்தி காந்ததாஸ்..! காரணம் என்ன தெரியுமா?
உள்ளூர் திறமைகளைக் கண்டறிதல், இளைஞர்களிடையே விளையாட்டுத் திறன்களை வளர்ப்பது மற்றும் குரேஸில் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு வாய்ப்புகளை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்திய இராணுவம் இப்பகுதியில் குளிர்கால விளையாட்டுகளை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.
February 23, 2025 1:20 PM IST
