Last Updated:
கர்நாடகா பெலகாவியில் நடந்த கூட்டத்தில், கருப்பு கொடி காட்டியதால் ஆத்திரம் அடைந்த சித்தராமையா, எஸ்.பி. நாராயண பரமணியை அடிக்க கை ஓங்கினார். எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
கர்நாடகா மாநிலம் பெலகாவி பகுதியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா பங்கேற்றார்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் சித்தராமையா, மேடையில் பேசுவதற்காக நின்றிருந்தார். அப்போது, அங்கு கூட்டத்தில் கீழே இருந்த சிலர் கருப்பு கொடி காட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதனை பார்த்ததும், ஆத்திரம் அடைந்த சித்தராமையா, அங்கிருந்த காவல்துறை அதிகாரியை அழைத்தார். அப்போது மேடையில் இருந்த தார்வாட் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நாராயண பரமணி அவர் அருகே வந்தார்.
அவர் வந்ததும், அவரை பார்த்து சித்தராமையா, எப்படி எதிர்ப்பாளர்கள் கூட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டார்கள் என்றும், எப்படி கருப்பு கொடி காட்டுவார்கள் என்றும் கோவத்தோடு கேட்கிறார். தொடர்ந்து “யார் இங்கே எஸ்.பி.? நீங்க என்ன செய்கிறீர்கள்” என கேட்டு அத்தனை ஆயிரம் பேருக்கு முன்னால் அவரை அடிப்பதற்கு கையை ஓங்கினார். உடனே கூடுதல் எஸ்.பி. நாராயண பரமணி இரண்டடி பின்சென்றார். பிறகு அவரை கடித்துக்கொண்ட சித்தராமையா கூட்டத்தில் பேசினார். தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.
#WATCH | Karnataka Chief Minister Siddaramaiah angrily calls a Police officer on stage during Congress’ protest rally in Belagavi and gestures raising his hand at him.
During the CM’s address here, a few women, who are reportedly BJP activists, indulged in sloganeering… pic.twitter.com/qtC6hL9UYT
— ANI (@ANI) April 28, 2025
சித்தராமையாவின் இந்த நடவடிக்கையை கண்டித்துள்ள எதிர்க்கட்சி ஜெடிஎஸ், “காவல்துறை அதிகாரியை அடிக்க கையை உயர்த்துவது உங்கள் பதவிக்கோ கண்ணியத்திற்கோ எந்தப் பெருமையையும் தராது. உங்கள் பதவிக்காலம் 5 ஆண்டுகள் மட்டுமே. ஆனால் ஒரு அரசு அதிகாரி 60 வயது வரை பணியாற்றுகிறார். அதிகாரம் யாருக்கும் நிரந்தரமானது அல்ல. உங்கள் தவறான நடத்தையை சரிசெய்து கொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளது.
அதேபோல் கர்நாடகா பாஜக செய்தித் தொடர்பாளர் விஜய் பிரசாத், “ஒரு காவல்துறை அதிகாரிக்கு எதிராக நீங்கள் கையை உயர்த்திய செயல் மிக உயர்ந்த மட்டத்திற்கு அவமானகரமானது. உங்கள் ஆணவம் கற்பனை செய்யக்கூடிய அனைத்து வரம்புகளையும் தாண்டிவிட்டது. இது மன்னிக்க முடியாத அவமதிப்பு” எனத் தெரிவித்துள்ளார்.
April 28, 2025 6:02 PM IST

