Last Updated:
Shocking Video | கண்ணூர் மட்டுலியில் நரி சிறுவனை கடிக்க முயன்ற போது சிறுமி துணிந்து காலணியால் தாக்கி காப்பாற்றினார்.
கேரளாவில் ஊருக்குள் புகுந்த நரி ஒன்று, சிறுவனை கடித்து இழுத்துச் செல்ல முற்பட்ட சம்பவம் பதைபதைக்க வைத்துள்ளது.
சங்க காலத்தில் புலியை முறத்தால் அடித்து விரட்டிய தமிழச்சி என்று கதையில் படித்திருப்போம். நவீன காலத்தில் அப்படியொரு சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது. சிறுவனை கவ்வி இழுத்துச் செல்ல முற்பட்ட நரியின் முகத்தில் காலணியால் பளார் பளார் விட்டு விரட்டியடித்த சிறுமி சிங்கப்பெண்ணாக மாறியுள்ளார்.
கேரளா மாநிலத்தில் பெரும்பான்மையான பகுதிகள் மலையும், மலை சார்ந்த இடமாக அமைந்துள்ளன. இதனால், அவ்வப்போது வனத்தை ஒட்டிய குடியிருப்புக்குள் காட்டு விலங்குகள் நடமாடுவது சர்வசாதாரணமாகிவிட்டது. இதில், கண்ணூர் மாவட்டம் மட்டுலி பகுதியில் அடிக்கடி நரிகள் ஊருக்குள் புகுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால், நரிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் குடியிருப்பு பகுதியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு நரி ஒன்று வந்ததை கண்டதும் அவர்கள் பதற்றத்துடன் தலைதெறிக்க ஓடியுள்ளனர். ஆனால், நரி விடாமல் அவர்களை தூத்தியுள்ளது. 4 பேரும் ஒருவர் பின் ஒருவதாக தப்பியோடியபோதும், பக்கத்தில் வீட்டு திண்ணையில் ஒரு சிறுவன் சிவனேனு அமர்ந்துள்ளார்.
தனது சகாக்கள் ஏன் ஓடி வருகிறார்கள் என்று அவர்களை அந்த சிறுவன் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, தந்திரமாக வந்த நரி அந்த சிறுவனின் காலை கவ்வி இழுத்துச் செல்ல முற்பட்டுள்ளது. உடனே சுதாரித்துக் கொண்ட சிறுமி ஒருவர், துணிந்து வந்து அந்த நரியின் முகத்தில் காலணியால் பளார் பளார் என அறைந்தார். விடாமல் அவர் தாக்கியதால், வலி தாங்க முடியாமல் அந்த நரி அங்கிருந்து தலைதெறிக்க ஓடியது.
இதில், காயமடைந்த சிறுவனை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பதைக்க வைத்துள்ளது. இனியும், அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதற்கு முன்பு நரிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
September 24, 2025 2:54 PM IST
Shocking Video | ஊருக்குள் திடீரென புகுந்த நரி.. அதிர்ச்சியில் உறைந்த சிறுவர்கள்.. அடுத்து நடந்த ஷாக் சம்பவம்!

