அந்த அறிக்கையில், “2011 முதல் 2015 வரை அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்ட பணி நியமனங்களில் முறைகேடுகள் நடந்ததாக, அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க குற்றம்சாட்டியது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கை விசாரித்த அமலாக்கத்துறை, அமைச்சர் செந்தில் பாலாஜியைக் கைதுசெய்திருக்கிறது. இதே குற்றச்சாட்டுக்காக செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
தி.மு.க-வின் முதல்வர் குடும்பத்தினருக்கு நெருக்கமானவர் என்பதால், செந்தில் பாலாஜி குற்றமற்றவராகி விடுவாரா… செந்தில் பாலாஜி மீது தவறில்லையென்றால் அதை நீதிமன்றங்கள் மூலம் நிரூபிக்க அவருக்கு வாய்ப்பிருக்கிறது. அதைவிடுத்து, நாங்கள் என்ன வேண்டுமானாலும் அட்டூழியம் செய்வோம். நடவடிக்கை எடுக்கக் கூடாது. அப்படி நடவடிக்கை எடுத்தாலும் தடுப்போம் என்றால் அதை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு அனுமதிக்காது. ஊழல்வாதிகள் ஒருபோதும் தப்பிக்க முடியாது. மக்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை ஏமாற்ற முடியாது என்பதை தி.மு.க., அதன் கூட்டணிக் கட்சிகள் உணர வேண்டும்” என்று வானதி சீனிவாசன் கூறியிருக்கிறார்.

