தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் 86-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற பிறகுச் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “மதவாத சக்திகள் தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவிலேயே எங்கும் இருக்கக் கூடாது என மிகத் தீவிரமாகக் களம் கண்டவர் வாழப்பாடி ராமமூர்த்தி. பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராகப் போராடும் மக்களை விஜய் நேரில் சந்திக்கிறார். அதற்குக் காவல்துறை அனுமதி வழங்கி இருக்கிறது. அங்குள்ள மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்கக் கூடாது என்பதுதான் அனைவரின் விருப்பம். இதை ஏற்கனவே காங்கிரஸ் வலியுறுத்தி இருக்கிறது. மக்களின் கோரிக்கையைத் தமிழ்நாடு அரசு கனிவோடு பரிசீலனை செய்ய வேண்டியது அவசியம். இது குறித்து சட்டப்பேரவையிலும் பேசப்பட்டுள்ளது. இந்துத்துவா சக்திகளை அழிக்க வேண்டும் என்று நினைத்தால், இந்தியா கூட்டணிக்குத்தான் விஜய் வர வேண்டும். அதுதான் அவருக்கும், அவரது கொள்கை, கோட்பாட்டுக்கும் நல்லது” என்றார்.
முன்னதாக த.வெ.க முதல் மாநாட்டில் பேசிய அக்கட்சித் தலைவர் விஜய், “கட்சியின் கோட்பாடாக ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதை அறிவித்த போதே எதிரியை அறிவித்துவிட்டேன். சாதி, மதம், இனம், மொழி, பாலினம், பணம், எனப் பிரிக்கும் பிளவுவாத அரசியலையும், ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தையும்தான் எதிர்க்கப் போகிறேன். ஒரு கூட்டம் யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்கள் மீது குறிப்பிட்ட கலரைப் பூசி, ஃபாசிசம் என்று பேசிக்கொண்டு, சிறுபான்மை, பெரும்பான்மை பயத்தைக் காட்டுகிறார்கள். அவர்கள் பாசிசம் என்றால், நீங்கள் பாயாசமா? இந்த மக்கள் விரோத ஆட்சியை ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று கூறி ஏமாற்றுகிறார்கள்.
