ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள செபி தலைவர் ஏன் பதவி விலகவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதானி குழுமம் பங்கு மோசடியில் ஈடுபட்டதாக ஏற்கனவே அடுக்கடுக்காக குற்றம்சாட்டியிருந்த அமெரிக்க நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், தற்போது செபி தலைவர் மீதும் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.
அதானி குழுமத்துடன் தொடர்புடைய வெளிநாட்டு போலி நிறுவனங்களில், செபி தலைவர் மாதபி புரி புச் மற்றும் அவரது கணவர் தவல் புச் தங்கள் பங்குகளை வைத்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிக்க:
அதானி குழுமத்தின் போலி நிறுவனங்களில் SEBI தலைவருக்கு பங்குகள் – ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கையில் பரபரப்பு குற்றச்சாட்டு
இந்த நிலையில், இந்திய பங்குச்சந்தைகள் மிகவும் அபாயகரமான கட்டத்தில் இருப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள அவர், செபி தலைவர் மீதான குற்றச்சாட்டுகளால், செபி அமைப்பின் நம்பகத்தன்மை சமரசம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
செபியின் தலைவர் மாதபி புரி ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ள ராகுல், முதலீட்டாளர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழந்தால், அதற்கு பொறுப்பேற்பது மோடியா? மாதபியா? அல்லது அதானியா? என்றும் வினவியுள்ளார். மேலும் இவ்விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்குமா? எனவும் ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.
The integrity of SEBI, the securities regulator entrusted with safeguarding the wealth of small retail investors, has been gravely compromised by the allegations against its Chairperson.
Honest investors across the country have pressing questions for the government:
– Why… pic.twitter.com/vZlEl8Qb4b
— Rahul Gandhi (@RahulGandhi) August 11, 2024
இதனிடையே, ஹிண்டர்பர்க் நிறுவன குற்றச்சாட்டில் உண்மையில்லை செபி தலைவர் மாதபி புரி புச் மற்றும் அவரது கணவர் தவல் புச் கூட்டாக விரிவான விளக்கம் கொடுத்துள்ளனர்.
ஹிண்டன்பர்க் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முதலீடுகள், கடந்த 2015 ஆம் ஆண்டு, தாங்கள் சிங்கப்பூரில் வசித்த போது முதலீடு செய்யப்பட்டவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, செபியின் முழு நேரத் தலைவராக மாதபி புரி புச் பதவியேற்பதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு முதலீடு செய்யப்பட்டவை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஐஐடி அகமதாபாத்தில் படித்த மாதவி புரி 20 ஆண்டுகளாக வங்கி மற்றும் நிதி சார்ந்த தனியார் துறைகளில் பணியாற்றி வந்ததாகவும், டெல்லி ஐஐடியில் படித்த அவரது கணவர் 35 ஆண்டுகள் தனியார் நிறுவனத்தில் பணியாற்றியதாகவும் கூறப்பட்டுள்ளது.
எனவே, தற்போது மாதவி பெறும் அரசு ஊதியத்தில் முதலீடு செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று, IPE ஐ.பி.இ. பிளஸ் நிதியத்தில் தலைமை முதலீட்டு அதிகாரியாக இருந்த அனில் அகுஜா மற்றும் தவல் புச் பள்ளிக்காலத்தில் இருந்து ஐஐடி வரை ஒன்றாக படித்தவர்கள் என்றும், அவரின் ஆலோசனையின் பேரில் பல நிறுவனங்களில் முதலீடு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அதானி குழுமத்தில் எவ்வித முதலீடுகளும், பத்திரங்களும் வாங்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
ஹிண்டன்பர்க் நிறுவனம் முன்பு வெளியிட்ட அறிக்கை தொடர்பாக விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பிய நிலையில், அதற்கு பதில் அளிக்காமல், செபி நிறுவனத்தின் நம்பகத்தன்மையை குலைக்கவும், அதன் தலைவர் மீது அவதூறு பரப்பும் முயற்சியில் இறங்கி இருப்பதாக செபி குற்றம்சாட்டியுள்ளது.
இந்நிலையில், ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை உண்மைக்கு புறம்பானது என்று கூறியுள்ள செபி, இந்திய முதலீட்டாளர்கள் பதற்றம் அடையவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
.
