மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ், சிவசேனா (உத்தவ்) கட்சிகள் தொடர்ந்து முட்டி மோதிக்கொண்டிருக்கின்றன. எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்), சிவசேனா (உத்தவ்) கட்சிகள் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இதுவரை பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. ஆனாலும் இன்னும் சில தொகுதிகளுக்குக் காங்கிரஸும், உத்தவ் தாக்கரேயும் மாறிமாறி தங்களுக்கு வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கின்றன.
இந்த இரண்டு கட்சிகளும் தொடர்ந்து தொகுதிப் பங்கீட்டை விட்டுக்கொடுக்காமல் இருப்பதால்தான் இறுதி முடிவு எட்டப்படுவதில் சிக்கல் நீடிக்கிறது. இவர்களின் சண்டையில் அதிகம் பயனடைந்தது என்னவோ சரத்பவாராகத்தான் இருக்க முடியும்.

சரத்பவாரிடம் வந்த பஞ்சாயத்து
சரத்பவார் கட்சிக்கு ஆரம்பத்தில் 75 தொகுதிகள் மட்டுமே கொடுக்க பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த எண்ணிக்கை இப்போது 85 ஆக அதிகரித்து இருக்கிறது. காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சிகள் தொகுதிப் பங்கீட்டில் இறுதி முடிவு எட்ட முடியாமல் பஞ்சாயத்தை சரத்பவாரிடம் கொண்டு சென்றனர்.
சரத்பவார் உடனே மூன்று கட்சிகளும் தலா 85 தொகுதியில் போட்டியிடுவோம் என்று ஒரு தீர்ப்பை வழங்கி தனது கட்சிக்கான தொகுதி எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டார். இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு நிகரான தொகுதியைத் தனக்கு சரத்பவார் எடுத்துக்கொண்டார். 2000-ம் ஆண்டிலிருந்து சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைத் தனது ஜூனியர் கட்சியாகவே காங்கிரஸ் கருதி வருகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் கூட காங்கிரஸ் 147 தொகுதியிலும், உடையாத தேசியவாத காங்கிரஸ் 121 தொகுதியிலும் போட்டியிட்டன. அதில், தேசியவாத காங்கிரஸ் 55 தொகுதியில் வெற்றி பெற்றதால், அக்கட்சியின் வெற்றி விகிதம் 45 சதவீதமாகவும், காங்கிரஸ் 44 தொகுதியில் வெற்றி பெற்றதால் அக்கட்சியின் வெற்றி விகிதம் 30 சதவீதமாகவும் இருந்தது. இரு கட்சிகளும் சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்த போதிலும், மனம் தளராத சரத்பவார், பா.ஜ.கவுடன் முதல்வர் பதவிக்காக மோதிக்கொண்டிருந்த உத்தவ் தாக்கரேவை தனது பக்கம் இழுத்து புதிய கூட்டணியை உருவாக்கி உத்தவ் தாக்கரேவை முதல்வராக்கினார். இது பா.ஜ.க-விற்கு மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.
மக்களவைத் தேர்தல்
அதற்குப் பழிவாங்கத்தான் பா.ஜ.க-வின் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மறைமுகமாக சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை உடைத்துவிட்டார். இரண்டு கட்சிகளும் உடைந்த பிறகு முதல் முறையாக மக்களவைத் தேர்தலைச் சந்தித்த சிவசேனா (ஷிண்டே), உத்தவ் தாக்கரேயின் சிவசேனாவை விட வெற்றி விகிதத்தில் முன்னிலையிலிருந்தது.
சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் 10 தொகுதியில் போட்டியிட்டு 8 தொகுதியில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 17 தொகுதியில் போட்டியிட்டு 13 தொகுதியில் வெற்றி பெற்றது. இத்தேர்தல் முடிவுகள் மற்றும் ஹரியானா சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைக் காரணம் காட்டி சரத் பவார் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் தனது கட்சிக்கான தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டார்.

இது சரத்பவார் கட்சி மகாராஷ்டிராவில் ஆட்சியைப் பிடிப்பதற்கான ஒரு முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது. சரத்பவாருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் பெரும்பாலும் மேற்கு மகாராஷ்டிராவில் இருக்கிறது. மேற்கு மகாராஷ்டிராவில் தற்போது கட்சியை உடைத்துச் சென்ற அஜித்பவார் கை பலவீனமாக இருக்கிறது. காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்கரே முதல்வர் வேட்பாளர் குறித்து வாக்குவாதம் செய்துகொண்டிருந்த போதுகூட அதில் பெரிய அளவில் பங்கேற்காமலிருந்த சரத்பவார், தனது கட்சியை ஆட்சியில் அமர வைக்க மறைமுக வேலையில் ஈடுபட்டுள்ளார்.
உத்தவ் தாக்கரேயும், காங்கிரஸ் கட்சியும் தொகுதிப் பங்கீட்டில் தீர்வு காண சரத்பவாரிடம் சென்ற போது சரத்பவார் தனக்கான தொகுதிகளின் எண்ணிக்கையை ஒவ்வொரு முறை பேசும்போதும் ஒன்று, இரண்டாக அதிகரித்து 10 தொகுதிகளுக்கும் மேல் அதிகரித்துக்கொண்டார். இது சரத்பவாரின் அரசியல் வாரிசை முதல்வராக்க ஒரு சந்தர்ப்பமாக அமைந்துள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். மக்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதை நவம்பர் 23-ம் தேதிதான் தெரிந்து கொள்ள முடியும்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
