தனியார்மயமாக்கலை எதிர்க்கிறீர்கள். பணி நிரந்தரம் கோருகிறீர்கள். ஆனால், நான் தூய்மைப் பணியாளர்களிடம் பேசிய வரை இதைத் தாண்டியும் பல இன்னல்களை எதிர்கொள்கிறார்களே. வார விடுப்பு கூட இல்லாமல் ஓட வேண்டிய நிலையில்தானே அவர்கள் இருக்கிறார்கள்?
நிச்சயமாக, அவர்களுக்கு வார விடுப்பு கிடையாது. மகப்பேறு விடுப்பு கிடையாது. அடிப்படையாக நம் ஊரில் தொழிலாளிகளுக்குக் கிடைக்கும் எந்த உரிமையும் அவர்களுக்குக் கிடையாது. ஒதுங்குவதற்கு கழிவறை கிடையாது. அதைச் செய்கிறோம் இதைச் செய்கிறோம் என்கிறார்களே. தெருவில் இறங்கி சுத்தம் செய்யும் இவர்களுக்குப் பணி நேரத்தின் போது பயன்படுத்தப்பட்ட கழிவறைகளைக் கட்டிக் கொடுத்திருக்கலாமே?
பணி இடத்திலாவது அவர்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா? சூப்பர் வைசர்களின் பாலியல் வசைகளையும் துன்பங்களையும் சகித்துக் கொண்டுதான் அவர்கள் பணி செய்ய வேண்டியிருக்கிறது. அதையெல்லாம் விசாரிக்க ஒரு கமிட்டி கூட கிடையாது. இதில் பெரும்பாலானோர் விளிம்புநிலையில் இருக்கக்கூடிய ஒடுக்கப்பட்ட பெண்கள். சமூகநீதி பேசும் ஆட்சியிலேயே இவர்களின் குரலுக்கு மதிப்பில்லை.

நீங்கள் கேட்கும்படி மண்டலங்கள் 5 மற்றும் 6இல் தனியார்மயத்திலிருந்து பின்வாங்கினால் மற்ற மண்டலங்களும் அதைக் கேட்பார்கள். மேலும், மற்ற துறைகளுக்கும் இந்தப் போராட்டம் ஒரு வெற்றிகரமான முன்னுதாரணமாக இருக்கும். ஒரு “அரசு’ என்கிற இடத்தில் இருப்பதால் திமுக தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளில் சமரசம் செய்கிறதோ?
மண்டலங்கள் 4, 5, 6, 7, 8 ஆகியவற்றை தனியார்மயப்படுத்துவதாகக் கூறினார்கள். இப்போது 4, 7, 8 ஆகிய மண்டலங்களில் தனியார்மயப்படுத்தும் நடவடிக்கைகளை தேர்தல் வரை மேற்கொள்வதில்லை எனும் முடிவுக்கு வந்துவிட்டனர். அதையே எங்களுக்கும் செய்து விடுங்களேன். இவர்கள் தொழிலாளிகளின் குரலாக அவர்களின் உரிமைக்காக நிற்காமல், பெரு முதலாளிகளுக்கு என்ன செய்தியைக் கடத்த வேண்டும் என்கிற மனநிலையில்தான் இருக்கிறார்கள்.
மண்டலங்கள் 5, 6 இல் நாங்களாவது போராடி அரசு நிர்ணயித்திருக்கும் குறைந்தபட்ச ஊதிய உரிமையான ரூபாய் 753யைப் பெற்றிருக்கிறோம்.
