அங்கு நள்ளிரவில் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்ட பிறகும், சென்னையை சுற்றி பல்வேறு இடங்களில் தங்களின் கோரிக்கைகளை முன்னிறுத்தி போராடி கைதாகியிருந்தனர். தனியார் நிறுவனத்துக்கு கீழ் வேலைக்கு செல்லமாடோம் என்கிற அவர்களின் போராட்டம் 100 நாட்களை கடந்திருக்கிறது. இப்போது காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்துக்கு உயர் நீதிமன்றத்தில் அனுமதி வாங்கியிருக்கின்றனர்.

அம்பத்தூரில் உள்ள உழைப்போர் உரிமை இயக்கத்தின் அலுவலகத்தில் கீதா, பாரதி, வசந்தி, ஜெனோவா என நான்கு பெண்கள் போராட்டத்தையும் தொடங்கிவிட்டனர்.

தங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை இங்கிருந்து நகரமாட்டோம், என உறுதியாகக் கூறும் அவர்களை நேரில் சந்தித்து உரையாடினேன். ‘மழை, புயலு வெள்ளம்னு எல்லாத்தப்புவும் வேலை பார்த்திருக்கோம். புயல் அப்போலாம் வேலைக்கு போக பஸ்ஸூ கூட இருக்காது. நடந்தே போவோம். கொரோனா அப்போ எந்த கஷ்டமும் பார்க்காம ஒவ்வொரு வீட்டு குப்பையையும் அள்ளிருக்கோம். இப்போ எங்களையே குப்பையா தூக்கி வீசிட்டாங்க’ எனப் பேசத்தொடங்கினார் கீதா.
‘பன்னிரெண்டு வருசமா வேலை செய்யுறேன் தம்பி. வேலைக்கு சேர்ந்தப்போ எனக்கு 27 வயசு. குடும்ப சூழ்நிலையினாலதான் இந்த வேலைக்கு வந்தேன். என் வீட்டுக்காரரு வண்டி ஓட்டிட்டு இருந்தாரு. திடீர்னு அவருக்கு மூளையில கேன்சர் கட்டி. அடிக்கடி வலிப்பு வரும். கவர்மெண்ட்டு ஹாஸ்பிட்டல்ல சேர்த்துதான் வைத்தியம் பார்த்தேன். குணமில்லாத மனுசனால எப்படி வேலைக்கு போக முடியும்? ஆனா, எனக்கு ரெண்டு பொம்பளை புள்ளைங்க. அண்ணன் தம்பினு எல்லாருமே அன்றாடங்காச்சிங்க. நமக்கு கைகொடுத்து உதவுறதுக்கு ஆளுங்க கிடையாது.
