ஆந்திரப் பிரதேசம் மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், இந்தியா முழுவதும் கோவில்களில் பிரசாதம் வழங்க உபயோகப்படுத்தும் பொருள்கள் தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய “சனாதன தர்ம சான்றிதழ்’ வழங்க வேண்டும் எனப் பேசியுள்ளார்.
திருப்பதியில் லட்டு தயாரிக்கும் நெய்யில் கலப்படம் இருப்பதாக எழுந்த பிரச்னையை முன்னிட்டு இந்தக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார் பவன்.
திருப்பதியில் நடந்த ஒரு பேரணியில் பேசிய பவன் கல்யாண், சனாதன தர்மம் மீது அவதூறு அல்லது வெறுப்பைத் தூண்டுவதற்கு எதிராகப் பேசினார்.
கோவில் நடைமுறைகளின் புனிதம் மற்றும் மத பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்காக சனாதன தர்ம சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் எனப் பேசினார். அதுமட்டுமல்லாமல், மாநில அளவிலும் தேசிய அளவிலும் “சனாதன தர்ம பாதுகாப்பு வாரியம்” அமைக்கப்பட வேண்டும், அதன் மூலம் சனாதன தர்மத்தின் கொள்கைகளைப் பாதுகாத்து, நாடு முழுவதும் அதன் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
