ரஷ்ய – உக்ரைன் போர் 1,000 நாட்களை எட்டும் நிலையிலும், தீவிரமாக யுத்தம் நடைபெற்று வருகிறது. யுனிசெஃப் அமைப்பின் தகவலின் படி இந்தப் போரில் இதுவரை 2,406 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 659 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். 1,747 குழந்தைகள் காயமடைந்துள்ளனர். இதற்கிடையில், ரஷ்யாவிற்குள் உள்ள ராணுவ இலக்குகளைத் தாக்க நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்த, உக்ரைனுக்கு அமெரிக்கா ஒப்புதல் வழங்கியது.
இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை மறு பரீசீலனை செய்து புதிய கோட்பாட்டை இணைத்து ஒப்புதல் அளித்திருக்கிறார். அதன்படி, அணு ஆயுதம் இல்லாத நாடுகளுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தலாம் என்ற புதிய கோட்பாடு இணைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.
