கேரள மாநிலம் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி மறைந்து ஓராண்டை முன்னிட்டு அவரது முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி கூட்டம் இன்று நடைபெற்றது.
அதில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு கோட்டயம் புதுப்பள்ளியில் உள்ள உம்மன் சாண்டி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
அந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசுகையில், “2004 முதல் நான் அரசியலில் உள்ளேன். எனக்கு மிக விசாலமான அரசியல் அனுபவம் இல்லை. ஆனால், இந்திய அரசியலைப்பற்றிய சரியான அரசியல் அனுபவம் இருக்கிறது.
பலவிதமான அரசியல் தலைவர்களை நான் பார்த்திருக்கிறேன். அதில் மிகச் சிறப்பாக பேசும் அரசியல் தலைவர்களை நான் பார்த்திருக்கிறேன். நன்றாக சிந்திக்கும் தலைவர்களையும் பார்த்திருக்கிறேன். சில அரசியல் தலைவர்கள் மிகச் சிறப்பாக பேசுகிறார்கள், சிலர் அழகாக சிந்திக்கிறார்கள். ஒரு விஷயத்தைப் பற்றி நாம் பேசுவதற்கு முன்பு அது என்னவென்று சிந்திப்பது மட்டும் அல்ல, அதைப்பற்றி நாம் பீல் செய்ய வேண்டும். தங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளும் தன்மை அரசியல் தலைவர்களுக்கு வேண்டும் என்பதைதான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

குறிப்பாக ஒரு விவசாயி மழை பெய்யுமா, குடும்பத்தை காப்பாற்ற முடியுமா என்பது பற்றி நினைப்பதை நீங்கள் உணர்ந்துள்ளீர்களா?.
வயநாட்டில் வன விலங்குகளால் மக்கள் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். அந்த மக்களின் பிரச்னை பற்றி பேச உங்களால் முடியும். ஆனால், அங்குள்ள சிறுவர்களின் உணர்வுகளை, புலி முன்னே வந்த சமயத்தில் அந்த மனிதரின் மனதில் தோன்றிய எண்ணத்தை உங்களால் புரிந்துகொள்ள முடியுமா? அரசியல் என்பது பேசுவதும், சிந்திப்பதும் மட்டும் அல்ல மனிதனின் உள்ளத்தை புரிந்துகொண்டு அவரது உணர்வை ஃபீல் செய்வதாகும்.
