திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி செப்டம்பர் மாதம் 15 ம் தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் அன்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட இருக்கிறது. இதற்கு விண்ணப்பிக்கும் முகாம் கடந்த ஜூலை மாதம் இறுதியில் தொடங்கி ஆகஸ்டு20ம் தேதி வரை மூன்று கட்டங்களாக சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இந்த முகாம்களின் மூலமாக ஒரு கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் வந்து உள்ளன.
ஆனால், குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 லட்சத்துக்கு மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள், ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் மேல் விற்பனை செய்து ஜிஎஸ்டி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள், ஆண்டிற்கு வீட்டு உபயோகத்துக்கு 3,600 யூனிட்டிற்கும் அதிகமாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களின் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை கிடையாது என்று அரசு அறிவித்துள்ளது.
அதேபோல், சொந்த பயன்பாட்டுக்கு 4 சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள், மத்திய மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகளின் ஊழியர்கள், ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள் தவிர்த்த உள்ளாட்சி பிரதிநிதிகள் உரிமைத் தொகை கோர முடியாது.
ஆனால் அவர்களும் தற்போது விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே விண்ணப்பங்களில் சரியான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதா என்பதை விண்ணப்பதாரர்களின் வீட்டுக்கு சென்று ஆய்வு செய்யப்படும் என அரசு அறிவித்து தற்போது ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. ஒரு கோடி பேருக்கே உரிமைத் தொகை என அரசு முடிவு செய்த நிலையில் கூடுதலாக இருக்கும் 63 லட்சம் பேரை வடிகட்ட அரசு முடிவு செய்துள்ளது.

