புதுடில்லி: ”சுமார் 150 எம்.பி.,க்கள் அவையிலிருந்து தூக்கி எறியப்பட்டுள்ளனர். அதுபற்றியோ, அதானி பற்றியோ, ரபேல் பற்றியோ விவாதிக்காமல், மிமிக்ரி பற்றி விவாதிக்கிறீர்கள்” என ஊடகங்களிடம் ஆதங்கமாக பேசினார் காங்., எம்.பி., ராகுல்.
பார்லி.,யில் பாதுகாப்பு அத்துமீறல் விவகாரம் தொடர்பாக தொடர் அமளியில் ஈடுபட்டதால் ஏற்கனவே லோக்சபா மற்றும் ராஜ்யசபாவை சேர்ந்த எதிர்க்கட்சிகளின் எம்.பி.,க்கள் 141 பேர் குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இன்று (டிச.,20) மேலும் 2 எம்.பி.,க்கள் (கேரளாவை சேர்ந்த தாமஸ் சாழிகடன் மற்றும் ஏ.எம்.ஆரிப்) ஆகியோரும் லோக்சபாவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.,க்களின் எண்ணிக்கை 143 ஆனது.
சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து எம்.பி.,க்கள் நேற்று (டிச.,19) பார்லி., வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திரிணமுல் காங்., எம்.பி கல்யாண் பானர்ஜி, ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கர் அவை நடவடிக்கையின் போது செய்வதை போன்று நகைச்சுவையாக அனைவரின் முன்னிலையிலும் மிமிக்ரி செய்து காட்டினார். இதனை அங்கிருந்த காங்.,எம்.பி., ராகுல் தனது செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு கண்டனம் தெரிவித்தார். இன்றைய பார்லி., கூட்டத்தொடரிலும் இந்த செயலுக்கு பா.ஜ., எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி., ராகுலிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில்: எம்.பி.,க்கள் அங்கே அமர்ந்திருந்தனர். அவர்களை தான் நான் வீடியோ எடுத்தேன். அந்த வீடியோ எனது மொபைலில் தான் உள்ளது; ஊடகங்களுக்கும் காண்பிக்கிறேன். வீடியோ எடுக்கும்போது யாரும் எதுவும் சொல்லவில்லை.
சுமார் 150 எம்.பி.,க்கள் அவையிலிருந்து தூக்கி எறியப்பட்டுள்ளனர். ஆனால் ஊடகங்களில் அதுகுறித்து எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. அதானி பற்றியோ, ரபேல் பற்றியோ, வேலையில்லா திண்டாட்டம் பற்றியோ விவாதம் இல்லை. ஆனால் எங்கள் எம்.பி.,க்கள் மனமுடைந்து வெளியில் அமர்ந்துள்ளனர். ஆனால் நீங்கள் மிமிக்ரி பற்றி விவாதிக்கிறீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.

