Last Updated:
கர்நாடகாவில் காங்கிரஸ் வென்ற தொகுதிகளில் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் குறித்து ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்; தேர்தல் ஆணையம் பதில் தர வேண்டும் என வலியுறுத்தினார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் வென்ற தொகுதிகளை குறிவைத்து வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டதாக குற்றம்சாட்டிய ராகுல் காந்தி, டெல்லியில் இருந்து கொண்டே தமிழ்நாட்டில் உள்ள வாக்காளர்களுக்கு தெரியாமல் அவர்களின் பெயர்களையும் நீக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
வாக்கு திருட்டு புகார் குறித்து புதிய ஆதாரங்களுடன் டெல்லியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கர்நாடகாவில் கடந்த 2023 சட்டப்பேரவைத் தேர்தலில், அலந்த் தொகுதியில் மட்டும் 6 ஆயிரத்து 18 வாக்குகள் நீக்கம் செய்யப்பட்டதாக குறிப்பிட்டார். கடந்த 2018ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில், காங்கிரஸ் வலுவாக இருந்த, அந்த தொகுதியை குறி வைத்து இந்த வாக்குகள் திருடப்பட்டு இருப்பதாக ராகுல் குற்றம்சாட்டினார்.
மேலும், வெளிமாநிலத்தவர்களின் செல்போன் எண்கள், நவீன மென்பொருள், செயலிகள் மூலம் டெல்லியில் இருந்து கொண்டு, கால் சென்டர்கள் இயங்குவதைப் போன்று செயல்பட்டு, வாக்காளர்களுக்கே தெரியாமல் அவர்களின் பெயர்கள் நீக்கப்படுவதாக கூறினார். ஒருவர் 12 நிமிடங்களில் 14 வாக்காளர்களின் பெயர்களை நீக்கியதாக குற்றம்சாட்டிய ராகுல் காந்தி, இது அனைத்து மாநிலங்களிலும் நடைபெறும் என குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், கோதாபாய் என்பவருக்கு தெரியாமலேயே அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக கூறினார், கோதாபாய் என்பவரும், வீடியோ மூலம் அது குறித்து விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், எந்த கணினியில் இருந்து வாக்காளர்கள் நீக்கப்பட்டனர் என்ற ஐபி முகவரியை ஏன் தேர்தல் ஆணையம் தர மறுக்கிறது என ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். வாக்கு திருட்டில் ஈடுபட்டவர்களை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பாதுகாப்பதாகவும் ராகுல் குற்றம்சாட்டினார். வாக்காளர்கள் நீக்கம் தொடர்பாக தாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு 10 நாட்களுக்குள் கர்நாடக சிஐடியிடம் தேர்தல் ஆணையம் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி கெடு விதித்தார்.
September 18, 2025 2:11 PM IST
காங்கிரஸ் வென்ற தொகுதிகள் தான் குறி.. வாக்கு திருட்டு குறித்து புதிய ஆதாரங்களை வெளியிட்ட ராகுல் காந்தி

