Last Updated:
யுஜிசி புதிய நெறிமுறைகளை எதிர்த்து டெல்லியில் திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம். ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ், வைகோ, கனிமொழி, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) புதிய வரைவு நெறிமுறைகளைக் கண்டித்து அதனை ஒன்றிய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் திமுக மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, எம்.பிக்கள் அகிலேஷ் யாதவ், வைகோ, கனிமொழி, திருச்சி சிவா ஆகியோரும் இந்தியா முழுவதுமிருந்து மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
இதில் பங்கேற்றுப் பேசிய எம்.பி.அகிலேஷ் யாதவ், “மாணவர்களுக்கு எதிரான போக்கை மத்திய அரசு கொண்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே யுஜிசி வரைவு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. புதியக் கல்விக் கொள்கைக்கான எதிரான திமுகவின் முன்னெடுப்புடன் எப்போதும் சமாஜ்வாதி ஆதரவாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
அதேபோல், ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன் எம்.பி, “ஆர்.எஸ்.எஸ். அஜண்டாவின் அடிப்படையில் யுஜிசி வரைவு அறிக்கை வகுக்கப்பட்டுள்ளது. இது முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “ஆர்.எஸ்.எஸ்.சின் நோக்கம், தங்களுடையதைத் தவிர இந்த நாட்டில் உள்ள மற்ற அனைத்து வரலாறுகளையும் அனைத்து கலாச்சாரங்களையும், அனைத்து மரபுகளையும் ஒழிப்பதே என்று நான் சிறிது காலமாகவே சொல்லி வருகிறேன்.
அவர்கள் ஒரே கருத்தை, ஒரே வரலாற்றை, ஒரே பாரம்பரியத்தை, ஒரே மொழியை இந்த நாட்டின் மீது திணிக்க விரும்புவதால் அரசியலமைப்பைத் தாக்குகின்றனர். வெவ்வேறு மாநிலங்களின் கல்வி முறையை ஒரே கல்விமுறையாக மாற்றும் முயற்சி இது.
அவர்கள் நமது மாநிலங்களை, கலாச்சாரங்களை, மரபுகளை வரலாறுகளை என எதனையும் தாக்க முடியாது என்பதைப் புரிய வைக்க வேண்டும்” என்று பேசினார்.
February 06, 2025 4:47 PM IST

