இந்த நிலையில் அந்தக் கடையை விரிவாக்கம் செய்ய நினைத்தபோது, புதுச்சேரி நகராட்சி அதை அதிரடியாக அகற்றியது.
இந்த நிலையில்தான் கடற்கரை சாலையில் புதுச்சேரி சுற்றுலாத் துறையின் `லே கஃபே’ உணவகத்துக்கு அருகில் இருக்கும் இடத்தில், `I Pondy – Pondicherry information Bureau’ என்ற பெயரில் கடந்த 8 ஆண்டுகளாக தனி நபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.
சுற்றுலா தகவல் மையம் என்ற பெயரில், தனி நபர்களின், நிறுவனங்களின் விளம்பரமும் செய்யப்பட்டு வந்தன. ஆனால் அதற்காக அவர்கள் எந்த துறையிடமும், குறிப்பாக நகராட்சியிடமும் அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் சிறிய அளவில் செயல்பட்டு வந்த அந்த மையத்தை, பெரிய கூடாரமிட்டு சமீபத்தில் விரிவாக்கம் செய்ய முயற்சித்திருக்கிறார்கள். அதைப் பார்த்த நகராட்சி ஊழியர்கள், இங்கு தகவல் மையம் அமைப்பதற்கு யாரிடம் அனுமதி பெற்றீர்கள் என்று கேட்டிருக்கின்றனர்.
அதற்கு அவர்கள் யாரிடமும் அனுமதி பெறவில்லை என்று கூறியதும், அங்கிருந்த கூடாரத்தை அதிரடியாக அகற்றி வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி ஊழியர்களிடம் கேட்டபோது, “புதுச்சேரி அரசின் சுற்றுலாத்துறை இருக்கும்போது, தனி நபர்கள் ஏன் அதை செய்ய வேண்டும் ?
அதிலும் மிக முக்கியமான கடற்கரை சாலையில், எந்தவித அனுமதியும் பெறாமல் இத்தனை ஆண்டுகள் ஆக்கிரமித்திருக்கிறார்கள்” என்றனர். புதுச்சேரி நகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு, பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

