Last Updated:
2014ஆம் ஆண்டு தன்னிடம் பிரதமர் பதவி வந்தபோது, வெளிநாட்டுச் செய்தித்தாளில் வந்த ஒரு செய்தி எப்படி ஜிஎஸ்டிக்கு வழி வகுத்தது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அதில் தற்போது மேற்கொள்ளப்பட்டு நாளை (22ஆம் தேதி) முதல் அமலுக்கு வரும் ஜிஎஸ்டி சீர்திருத்தம் குறித்து பேசினார்.
ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தம் மூலம், நாட்டு மக்களுக்கு ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி இது இரண்டாவது பரிசு என்றும், முதல் பரிசு வருமான வரி குறைப்பு என்றும் குறிப்பிட்டார்.
குறிப்பாக வருமான வரி குறைப்பு மற்றும் ஜிஎஸ்டி சீர்திருத்தம் ஆகியவற்றின் காரணமாக சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய் சேமிக்க முடியும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார். குறிப்பாக 2014ஆம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்றபோது, வெளிநாட்டு செய்தித்தாள்களில் வந்த ஒரு செய்தி எப்படி ஜிஎஸ்டிக்கு காரணமாக அமைந்தது என்றும், அந்தச் செய்தி என்ன என்றும் விளக்கினார்.
பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது; “2014ஆம் ஆண்டு நாடு எனக்கு பிரதமராக பொறுப்பை வழங்கியபோது, வெளிநாட்டு செய்தித்தாள் ஒன்று சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், வரி மற்றும் சுங்கக் கட்டணம் காரணமாக ஒரு நிறுவனம் தனது பொருட்களை பெங்களூருவில் இருந்து வெறும் 570 கி.மீ. தொலைவில் உள்ள ஹைதராபாத்திற்கு நேரடியாக அனுப்புவதற்கு பதிலாக முதலில் பெங்களூருவில் இருந்து ஐரோப்பாவிற்கு அனுப்பிவிட்டு பிறகு அங்கிருந்து அதே பொருட்களை ஹைதராபாத்திற்கு அதனை அனுப்பிவிடலாம் என சொல்லப்பட்டிருந்தது.
வரிகள் மற்றும் சுங்க வரிகளின் சிக்கல்கள் காரணமாக அந்தக் காலத்தில் இதுதான் நிலைமை. அந்த நேரத்தில், இதுபோன்ற மில்லியன் கணக்கான நிறுவனங்களும், நாட்டு மக்களுடன் சேர்ந்து, பல்வேறு வரிகளின் குழப்பத்தால் தினசரி பிரச்சினைகளை எதிர்கொண்டன. ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு பொருட்களை கொண்டு செல்வதில் ஏற்படும் அதிக செலவுகள், வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டன.
#WATCH | Prime Minister Narendra Modi says, “I remember, in 2014, when the country entrusted me with the responsibility of Prime Minister, an interesting incident was published in a foreign newspaper during that initial period. It described the difficulties of a company. The… pic.twitter.com/ibbirPRnyK
— ANI (@ANI) September 21, 2025
அதன்பின் அனைத்து மாநிலங்களையும் இணைத்துக் கொண்டு, இந்தியாவின் மிகப்பெரிய வரி சீர்திருத்தத்தை சாத்தியமாக்கினோம். மத்திய மற்றும் மாநில அரசுகளின் முயற்சிகளின் விளைவாக, டஜன் கணக்கான வரிகளின் வலையிலிருந்து நாடு விடுவிக்கப்பட்டு, ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஒரே மாதிரியான வரி அமைப்பு நிறுவப்பட்டது. அதன் மூலம், ‘ஒரே நாடு, ஒரே வரி’ என்ற கனவு நனவாகியது” எனத் தெரிவித்தார்.
September 21, 2025 6:45 PM IST
“வெளிநாட்டு செய்தித்தாளில் வந்த ஒரு செய்தி ஏற்படுத்திய தாக்கம்…” ஜிஎஸ்டிக்கான காரணம் குறித்து மனம் திறந்த பிரதமர் நரேந்திர மோடி

