Last Updated:
பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக கடந்த 2001ஆம் ஆண்டு, அக்டோபர் 7ஆம் தேதி ஆட்சி பொறுப்பேற்றது முதல் இன்று வரை மக்கள் தனக்கு ஆசி வழங்கிவருவதாக தெரிவித்துள்ளார்.
மக்களின் தொடர் ஆதரவால் 25 ஆண்டுகளாக அரசின் தலைமைப் பொறுப்பில் நீடித்து வருவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2001-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி, முதல்முறையாக குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக நரேந்திர மோடி பதவியேற்றார். அதன் பின்னர், 2002, 2007 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெற்று முதலமைச்சராக நீடித்தார்.
இதையடுத்து, 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதால் பிரதமரான நரேந்திர மோடி, 2019 மற்றும் 2024-ஆம் ஆண்டு மக்களைத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று பிரதமராக நீடிக்கிறார்.
இந்நிலையில், தான் முதல்முறையாக முதலமைச்சராக பதவியேற்றபோது எடுத்த படத்தை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, மக்களின் ஆசியால் தொடர்ந்து 25 ஆண்டுகளாக தலைமைப் பொறுப்பில் நீடிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து நம்பிக்கை வைத்துள்ள இந்திய மக்களுக்கு நன்றி என தெரிவித்துள்ள பிரதமர் மோடி, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், சிறந்த நாட்டை உருவாக்கவும் பங்களித்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறியுள்ளார்.
கடந்த 11 ஆண்டுகளில் நாடு பல மாற்றங்களை அடைந்துள்ளதாகவும், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளின் நிலை மேம்பட்டிருப்பதாகவும், இந்தியா சுயசார்பை அடைவதற்கான திட்டங்களை தற்போது முன்னெடுத்து வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
October 07, 2025 3:13 PM IST

