Last Updated:
நானும் டிரம்பும் பேசினோம். நான் பேசும்போது அவர் பார்வையாளர்களுடன் அமர்ந்து எனது பேச்சை கேட்டு ரசித்தார். அது மதிப்புமிக்க தருணமாக அமைந்தது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான தனது நினைவுகளை பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். பிரபல எழுத்தாளரும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆய்வாளருமான லெக்ஸ் ஃப்ரீட்மேனுக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு “ஹௌடி மோடி” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போதும் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பில் இருந்தார். இந்நிலையில் அப்போது நடந்த நிகழ்வுகளை பிரதமர் மோடி ஃப்ரீட்மேனுக்கு அளித்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
அதில் மோடி கூறியதாவது, “‘ஹௌடி மோடி’ நிகழ்ச்சிக்காக நாங்கள் ஹூஸ்டனுக்கு செல்ல வேண்டும். அப்போது என்னுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இருந்தார். அரங்கத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. அரங்கம் முழுவதும் மக்கள் நிரம்பி வழிந்தனர். அமெரிக்காவில் நடந்த மிக முக்கியமான நிகழ்ச்சியாக இது மாறியது.
வழக்கமாக விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு தான் இத்தகைய கூட்டம் இருக்கும். ஆனால் ஒரு அரசியல் ரீதியான நிகழ்ச்சிக்கு இப்படி ஒரு கூட்டம் திரண்டது ஆச்சரியமாக பார்க்கப்பட்டது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் அங்கு வந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் நானும் டிரம்பும் பேசினோம். நான் பேசும்போது அவர் பார்வையாளர்களுடன் அமர்ந்து எனது பேச்சை கேட்டு ரசித்தார். அது மதிப்புமிக்க தருணமாக அமைந்தது.
பேசி முடித்த பின்னர் என்னுடன் நடந்து பார்வையாளர்களை வரவேற்க வேண்டும் என்று டிரம்பிடம் கூறினேன். அதற்கு அவர், ‘ஏராளமானோர் இங்கு உள்ளார்கள். வாருங்கள் நடந்து அவர்களுக்கு கை அசைத்து வாழ்த்து தெரிவிப்போம்’ என்றார். அந்த நேரத்தில் டிரம்புக்கு மிக கடுமையான பாதுகாப்பு அமைக்கப்பட்டிருந்தது.
ஆனால் நான் அவரிடம் கோரிக்கை வைத்ததும் அவர் எதையும் பொருட்படுத்தாது தனது பாதுகாப்புகளை மீறி ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் என்னுடன் நடந்து வந்து வாழ்த்துக்களை தெரிவித்தார். அந்த தருணம் எனக்கு மிகவும் உணர்வுபூர்வமாக அமைந்தது. அப்போதுதான் நான் நினைத்தேன், இந்த டொனால்ட் டிரம்புக்கு எவ்வளவு தைரியம் இருக்கும் என்று! அவர் தனது முடிவுகளை தானே எடுக்கிறார்.
ஆனால் அவர் என் மீதும் வந்திருந்த இந்தியர்கள் மீதும் நம்பிக்கை வைத்திருந்தார். எனக்கும் அவருக்குமான உறவு வலுவாக உள்ளது” என்று தெரிவித்தார்.
March 16, 2025 6:00 PM IST
‘இந்தியர்கள் மீது நம்பிக்கை வைத்து பாதுகாப்பை ட்ரம்ப் தவிர்த்தார்’ -நினைவுகளை பகிரும் பிரதமர் மோடி

