Last Updated:
பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடிய பிரதமர் மோடி, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் வெள்ள பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார்.
பஞ்சாப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசு சார்பில் ஆயிரத்து 600 கோடி ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். பஞ்சாப்பில் கடந்த சில நாட்களாக கொட்டித் தீர்த்த கனமழையால் பதான்கோட், குர்தாஸ்பூர், அமிர்தசரஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் கடும் பாதிப்புக்குள்ளாகின.
இந்நிலையில், குடியரசுத் துணை தலைவர் தேர்தலில் வாக்களித்த கையோடு பஞ்சாப் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, பதான்கோட்டில் இருந்து வான்வழியாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.
தொடர்ந்து குர்தாஸ்பூர் சென்ற பிரதமர் மோடி அங்கு தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினரிடம் மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து பொது மக்களை சந்தித்த பிரதமர் மோடி, அரசு உயர்மட்ட அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினர். இந்நிலையில், பஞ்சாப்புக்கு ஆயிரத்து 600 கோடி ரூபாய் வெள்ள நிவாரண நிதியை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
மேலும், மாநில பேரிடர் நிதி மற்றும் பிரதமரின் விவசாயிகள் நலநிதியின் 2ஆவது தவணை முன்கூட்டியே வழங்கப்படும் என்றார். இதுதவிர மழை வெள்ள பாதிப்புகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என்றார். மழையால் பாதிக்கப்பட்ட பள்ளிகளுக்கு சமக்ர சிக்சா அபியான் திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
தொடர்ந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இமாச்சலப்பிரதேச மாநிலத்திற்கு ஆயிரத்து 500 கோடி ரூபாயை நிவாரணமாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இமாச்சல பிரதேசத்தில் விமானம் மூலம் வெள்ளப் பாதிப்புகளை பிரதமர் பார்வையிட்டார். அப்போது, வெள்ள சேதம் மற்றும் பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு விளக்கம் அளித்தனர்.
தொடர்ந்து கங்கரா என்ற இடத்திற்கு சென்ற பிரதமர் மோடி மாநில உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடிய பிரதமர் மோடி, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். இதன் பிறகு, இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தார். பிரதமர் வீட்டுவசதித் திட்டம், தேசிய நெடுஞ்சாலைகள் சீரமைப்பு, பிரதமர் தேசிய நிவாரண பணிகள் ஆகியவற்றின்கீழ் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்ச ரூபாய் நிவாரணமும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமும் வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார். இதனிடையே, குஜராத்தின் பனஸ்கந்தாவில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுய்கம் என்ற கிராமம், வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
September 10, 2025 9:02 AM IST

