Last Updated:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “இந்தியா – பாகிஸ்தான் சண்டை நிறுத்த முடிவு” என அறிவித்தார். அதனைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தது.
ஜம்மு & காஷ்மீர் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி நான்கு பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இதனையடுத்து இந்திய ராஜாங்க ரீதியாக பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதேபோல், பாகிஸ்தானும் இந்தியா மீது சில நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இதனையடுத்து, மே 7ஆம் தேதி இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் மூலம், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இருந்த 9 பயங்கரவாத முகாம்களைத் துல்லியமாகக் குறிவைத்துத் தாக்கி அழித்தது. இதேசமயத்தில் பாகிஸ்தான் இந்திய எல்லைக் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதன் பிறகு இரு நாடுகளும் மாறி மாறி நடத்திய தாக்குதலால் போர்ப் பதட்டம் ஏற்பட்டது. பின்னர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “இந்தியா – பாகிஸ்தான் சண்டை நிறுத்த முடிவு” என அறிவித்தார். அதனைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தது.
இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு செயல்பாடுகள் குறித்தும் 33 நாடுகளுக்குச் சென்று எடுத்துரைத்த சசி தரூர், கனிமொழி, சுப்ரியா சுலே, ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட 7 பேர் தலைமையில் சென்ற எம்.பி.க்கள் குழுக்களை பிரதமர் மோடி தனது இல்லத்தில் நேற்றிரவு சந்தித்தார். அப்போது, எம்.பி.க்களின் பயண அனுபவங்களையும், இந்தியா மீதான உலக நாடுகளின் நிலைப்பாட்டையும் அவர் கேட்டறிந்தார்.
இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களைத் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பிரதமர் மோடி, பல்வேறு நாடுகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய பிரதிநிதிகளைச் சந்தித்ததாகவும், அமைதியை நோக்கிய இந்தியாவின் அர்ப்பணிப்பு மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தலை ஒழிக்க வேண்டியதன் அவசியத்தை விரிவாக எடுத்து கூறினார்கள் எனவும் பதிவிட்டுள்ளார். நாட்டிற்காக எம்.பி.க்கள் குழுக்கள் ஒற்றுமையுடன் குரல் கொடுத்த விதம் பெருமை தருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
June 11, 2025 7:04 AM IST
