Last Updated:
ஆனந்த் அம்பானி வந்தாராவில் நடைபெறும் பணிகள், விலங்குகளுக்கு வழங்கப்படும் சேவைகள் உள்ளிட்டவை குறித்து மோடிக்கு விளக்கினார்.
ஆனந்த் அம்பானியின் வந்தாராவை நேரில் பார்வையிட்ட பிரதமர் மோடி அங்கு விலங்குகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை ஆர்வத்துடன் கேட்டறிந்தார்.
குஜராத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அங்கு ஜாம் நகரில் செயல்பட்டு வரும் ஆனந்த் அம்பானியின் விலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தை கடந்த ஞாயிறு அன்று பார்வையிட்டார்.
வன நட்சத்திரம் என்று அர்த்தம் கொண்ட வந்தாரா என்ற இந்த விலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளை இணைந்து தொடங்கியுள்ளது. இதனை ரிலையன்ஸ் குழுமத்தின் சேர்மன் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி நிர்வகித்து வருகிறார்.
குஜராத் மாநிலம் ஜாம் நகரில் 3000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் இந்த வந்தாரா பரந்து விரிந்து காணப்படுகிறது. இதற்குள் வன விலங்குகளுக்கான மருத்துவமனைகள், உடல் நல மையம் உள்ளிட்ட ஏராளமான அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
வந்தாரா சர்வதேச விலங்குகள் அமைப்பான இன்டர்நேஷனல் யூனியன் ஃபார் கன்சர்வேஷன் நேச்சர் (IUCN), உலக வன விலங்குகள் நிதியம் (WWF) ஆகிய அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் வந்தாரா 200-க்கும் அதிகமான யானைகளை மீட்டெடுத்து பராமரித்து வருகிறது.
இந்த நிலையில் வந்தாராவை பிரதமர் மோடி கடந்த ஞாயிறு அன்று பார்வையிட்டார். அவருடன் சென்ற ஆனந்த் அம்பானி வந்தாராவில் நடைபெறும் பணிகள், விலங்குகளுக்கு வழங்கப்படும் சேவைகள் உள்ளிட்டவை குறித்து மோடிக்கு விளக்கினார்.
இதையும் படிங்க – வனவிலங்கு மறுவாழ்வு மையம் “வந்தாரா”வை திறந்து வைத்த பிரதமர் மோடி!
வந்தாரா விலங்குகள் மீட்பு மறுவாழ்வு மையத்தில் 1 லட்சம் சதுர அடி அளவில் மருத்துவமனையும், ஆய்வு மையமும் உள்ளன. இங்கு ஐசியு, MRI, CT Scan, X-Ray, அல்ட்ரா சண்ட், எண்டோஸ்கோப்பி, டென்டல் ஸ்கேலர் உள்ளிட்ட நவீன மருத்துவ வசதிகள் உள்ளன. இவை குறித்தும் பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டு அறிந்து கொண்டார்.
March 04, 2025 3:43 PM IST
வந்தாராவில் சிங்கம், புலிகளை பார்வையிட்ட பிரதமர் மோடி.. மருத்துவ வசதிகளை ஆர்வத்துடன் அறிந்துகொண்டார்

