மத அரசியலில் ஈடுபட மாட்டேன் என கூறிய பிரதமர் மோடி, இஸ்லாமியர்கள் குறித்து தனது பரப்புரையில் பேசியுள்ளார். இதற்கு மட்டன் – சிக்கன், இந்து முஸ்லிம் என பேசுவதை மோடி நிறுத்த வேண்டும் என மல்லிகார்ஜூன கார்கே பதிலடி கொடுத்துள்ளார்.
பரபரப்பு மற்றும் சலசலப்புக்கு இடையே நாட்டின் மக்களவை தேர்தல் ஐந்தாம் கட்டத்தை நெருங்கியுள்ளது. இதுவரை கடந்த வந்த ஒவ்வொரு கட்டத்திலும் அரசியல் கட்சிகளுக்கு இடையேயான வார்த்தை போர் முற்றிவரும் நிலையில், புதுப்புது விவாதங்களும் முளைக்கின்றன. குறிப்பாக, ஏப்ரல் மாதம் ராஜஸ்தானில் தேர்தல் பரப்புரையில் உரையாற்றிய பிரதமர் மோடி, நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? என இஸ்லாமியர்களை மறைமுகமாக விமர்சித்ததாக சர்ச்சையானது.
மேலும், காங்கிரஸின் சிந்தனை தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது என்று கூறியதற்கும் பலத்த கண்டனம் எழுந்தது. இந்த கருத்துகள் குறித்து பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்தது.
இதில், தேசியக் கட்சிகளின் நட்சத்திரப் பேச்சாளர்கள், அடுத்த கட்ட தேர்தல் பிரச்சாரங்களில் சமூகத்தின் நுட்பமான கட்டமைப்பைக் கெடுக்கக்கூடாது என தேர்தல் ஆணையம் மீண்டும் வலியுறுத்தியது. இந்த நிலையில், வாரணாசியில் பிரதமர் மோடி நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், ராஜஸ்தானில் பேசிய சர்ச்சை பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அதிக குழந்தைகளைப் பற்றி பேசும்போது, இந்து என்றோ இஸ்லாமியர்கள் என்றோ தான் குறிப்பிடவில்லை என்றார். மத அரசியலில் தாம் எப்போதும் ஈடுபட்டதில்லை என்றும், வாழ்நாளில் இந்து – முஸ்லிம் பிரிவினையை எப்போதும் செய்ய மாட்டேன் எனவும் பிரதமர் நரேந்திர மோடி நியூஸ் 18க்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
இந்நிலையில், நேற்று மும்பையில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், இஸ்லாமியர்களுக்காக மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
நாடு முழுவதும் ஓபிசி இடஒதுக்கீட்டில் இஸ்லாமியர்களை சேர்க்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி விமர்சித்தார். இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே லக்னோவில் செய்தியாளர்களைச் சந்தித்த போது, பிரதமரின் கருத்து குறித்து கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு, பிரதமர் மோடி மற்றும் பாஜகவினர் மட்டன், சிக்கன், மாங்கல்யம் ஆகியவற்றை பற்றி பேசுவதையும், இந்து-முஸ்லிம் குறித்து பேசுவதையும் விட்டுவிட வேண்டும் என்றும், கடந்த 10 ஆண்டுகளாக செய்யப்பட்ட வளர்ச்சித் திட்டத்தை பற்றி பேசவேண்டுமெனவும் கூறினார்.
இந்து-முஸ்லிம் குறித்து பிரதமர் மோடி மட்டுமே பேசுகிறார் என்றும், இந்தியா கூட்டணி தரப்பில் அதுபோன்று பேசுவதில்லை என்றும் கூறினார். பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள அனைத்து தரப்பு மக்களின் சூழ்நிலைகளை பகுப்பாய்வு செய்து, அவர்களுக்கு ஏற்ற கொள்கைகளை உருவாக்கவே சாதிவரி கணக்கெடுப்பை நடத்துவோம் என்றார். ஆனால், சமூகத்தை பிரிப்பதற்காக பிரதமர் மோடி இதை தவறாகப் பேசுவதாகவும் கார்கே தெரிவித்தார்.
