சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட நிலையில், பொன்முடியை திடீரென மு.க.அழகிரி சந்தித்து பேசியிருப்பது திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து கீழமை நீதிமன்றம் விடுதலை செய்ததை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் ரத்து செய்தார். மேலும், பொன்முடியும், அவரது மனைவி குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்ததோடு, இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.50 லட்சம் அபராதம் விதித்தார். இந்த தீர்ப்பையடுத்து, பொன்முடியின் எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டதோடு, அமைச்சர் பதவியும் தானாகவே தகுதியிழப்பானது. இதையடுத்து, 3 ஆண்டு தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு செய்ய உள்ளார். அதற்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளது உயர் நீதிமன்றம்.
இந்தநிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினை திமுக துணைப்பொதுச்செயலாளர் பொன்முடி நேற்று சந்தித்துப்பேசினார். அப்போது, வழக்கு தொடர்பான மேல்முறையீடு உள்ள விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதனிடையே, முன்னாள் அமைச்சர் பொன்முடியை முன்னாள் எம்.பி-யான மு.க.அழகிரி இன்று சந்தித்தார். பொன்முடி வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ள பொன்முடியை, மு.க. அழகிரி சந்தித்துள்ள நிகழ்வு திமுக மற்றும் அரசியல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

