சுங்கச் சாவடிகளை முற்றுகையிட்டு போராட்டம்
`காலாவதியான பின்னும் கந்துவட்டிகாரனைவிட மிக மோசமாக வசூல் செய்யும் சுங்கச்சாவடிகளை மத்திய அரசு மூட வேண்டும்” எனக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகளும் அடுத்தடுத்து போராட்டத்தில் களமிறங்கியிருக்கின்றன.
தமிழ்நாட்டில் ஏற்கெனவே 67 சுங்கச் சாவடிகள் இருக்கும் நிலையில், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மேலும் புதியதாக 3 சுங்கச் சாவடிகளைக் கொண்டுவந்திருக்கிறது தேசிய நெடுஞ்சாலை ஆணையம். இதன்மூலம் தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை 70-ஆக உயர்ந்திருக்கிறது. இது ஒருபுறமிருக்க, காலாவதியான சுங்கச் சாவடிகள் சாலை அமைத்ததற்கான மொத்த தொகையை வசூல் செய்த பின்னரும்கூட தொடர்ந்து பல ஆண்டுகளாக முறைகேடாக பணம் வசூல் செய்துவருவதாக குற்றச்சாட்டுகள் அதிகரித்திருக்கின்றன.

“60 கி.மீக்கு ஒரு சுங்கச்சாவடிதான் அமைக்க வேண்டும் என்ற தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் விதிமுறைகளுக்கு மாறாக, குறைவான தூரத்திலும் பல்வேறு சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு சட்டவிரோதமாக வசூல் செய்துகொண்டிருக்கின்றன. சமீபத்தில்கூட, மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் நுழைந்த பத்துக்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகளை ஃபாஸ்டேக்கில் பணம் இல்லை என்று கூறி உள்ளே விடாமல் திருப்பி அனுப்பிய அடாவடி சம்பவமும் அரங்கேறியுள்ளது.” என்று அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்கிறது.
இப்படியாக தொடர்ந்து சுங்கச்சாவடி சர்ச்சைகள் நீண்டுகொண்டே சென்றுகொண்டிருக்கும் நிலையில், சட்டவிரோதமான சுங்கச் சாவடிகளை மூடவேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினரும் குரல்கொடுத்ததோடு, போராட்டத்திலும் குதித்தனர். குறிப்பாக, மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கடந்த செப்டம்பர் 16-ம் தேதி பரனூர், விக்கிரவாண்டி, பள்ளிக்கொண்டா, கருமத்தம்பட்டி, கப்பலூர், நாங்குநேரி என ஏழு சுங்கச் சாவடிகளை ஒரே நேரத்தில் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
