குற்ற வழக்கை விரைந்து முடித்துத் தருவதோடு, வழக்கில் பிடிபட்ட வாகனத்தையும் விடுவிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் பெற்ற காவல் பெண் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம்.
அப்போது நம்மிடம் பேசியவர்கள், “நெல்லை மாவட்டம் பனக்குடியைச் சேர்ந்த செல்வகுமார். இவர் மீது ஆள் கடத்தல் வழக்கு சம்பந்தமாகத் தென்காசி மாவட்டம் கடையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக செல்வக்குமார் கடையம் காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி நிபந்தனை ஜாமின் கையெழுத்துப் போட்டுவந்துள்ளார். அப்போது இந்த வழக்கு தொடர்பாக கடையம் காவல்நிலைய காவலர்கள், காவல் ஆய்வாளரைப் பார்க்குமாறு கூறியுள்ளனர்.

அதன்பேரில் கடையம் காவல் ஆய்வாளர் மேரி ஜெமிதாவை காவல் நிலையத்தில் சந்தித்து இந்த வழக்கு சம்பந்தமாக செல்வகுமார் நேற்று பேசியுள்ளார்.
அப்போது, “வழக்கைச் சீக்கிரம் முடித்துத் தருவதற்கும், கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனத்தைச் சீக்கிரம் வெளியில் எடுப்பதற்கும் ஏற்பாடு செய்து தருகிறேன். ஆனால் அதற்கு ரூ.30 ஆயிரம் லஞ்சமாகத் தரவேண்டும்’ என செல்வக்குமாரிடம் கேட்டுள்ளார்.
