Last Updated:
மாஸ்கோவில் நடைபெறும் இரண்டாம் உலகப் போர் வெற்றி விழா அணிவகுப்பில் பிரதமர் மோடி பங்கேற்கமாட்டார் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இரண்டாம் உலகப் போரின் 80ஆம் ஆண்டு வெற்றி கொண்டாட்டம் வரும் மே 9ஆம் தேதி துவங்கி 11ஆம் தேதி வரை மாஸ்கோவில் நடக்கிறது. இதில், சீன அதிபர் ஜி ஜின்பிங், உள்ளிட்ட உலக நாடுகளின் பல தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இதில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்த மாத துவக்கத்தில் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த அழைப்பைத் தொடர்ந்து, இந்தியா பங்கேற்பது குறித்து உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் பதில் கொடுத்திருந்தது. அதேசமயம், ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான டிஏஎஸ்எஸ் இந்த ஆண்டு வெற்றிக் கொண்டாட்டத்தில் இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்க வாய்ப்பு இருக்கிறது எனத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், மாஸ்கோவில் மே 9 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள வெற்றி தின கொண்டாட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள மாட்டார் என்று ரஷ்ய கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதேசமயம், இந்த விவகாரம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பிரதமர் மோடியின் ரஷ்ய பயணம் ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவித்துள்ளது.
April 30, 2025 3:52 PM IST

