சில சினிமா பாடல்கள் யார் பாடினார் என்று தெரியாது. பல ஆண்டுகள் பல தசாப்தங்களைத் தாண்டி நிலைத்து நிற்கும். அப்படி ஒரு பாட்டு கலைஞர், பின்னணிப்பாடகர் தான், கேகே என்னும் கிருஷ்ணகுமார் குன்னத்.
இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒடியா, பெங்காலி, அஸ்ஸாமி, குஜராத்தி ஆகியப் பல்வேறு மொழிகளில் பின்னணிப் பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் பாடியுள்ளார். ஆரம்பத்தில் ஜிங்கிள்களுக்குப் பாடிய அவர், 1996ஆம் ஆண்டு, திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசைமூலம் திரையுலகில் கால் பதித்தார்.
1999ஆம் ஆண்டு,உலகக்கோப்பை கிரிக்கெட்டின்போது, இந்திய அணியை ஆதரித்து இவர் பாடிய சுயாதீனப் பாடல் மிகப்பெரிய பேரை அவருக்கு உண்டாக்கிக்கொடுத்தது.
அதேபோல், பின்னணிப் பாடகர் கேகே, சுமார் 3500க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். குறிப்பாக, தமிழ்த் திரைப்படங்களில் யுவன்சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் ஆகிய இசையமைப்பாளர்களின் படங்களில் அதிக ஹிட்பாடல்களைப் பாடியுள்ளார், பின்னணிப் பாடகர் கேகே.
மன்மதன் திரைப்படத்தில் காதல் வளர்த்தேன்,கில்லி திரைப்படத்தில் அப்படிப்போடு, செல்லமே திரைப்படத்தில் காதலிக்கும் ஆசை இல்லை, 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தில் நினைத்து நினைத்து பார்த்தேன், காக்க காக்க திரைப்படத்தில் உயிரின் உயிரே, சாமி திரைப்படத்தில் கல்யாணம் தான் பண்ணிகிட்டு ஓடிப்போலாமா, சந்திரமுகி திரைப்படத்தில் அண்ணனோட பாட்டு உள்ளிட்ட சுமார் 66 பாடல்களைப் பாடியுள்ளார். அதேபோல், இவர் பாடிய பாடல்களில் லேலக்கு லேலக்கு லேலா, ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி, குண்டுகுண்டுபொண்ணே, பனித்துளி ஆகியப் பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் பட்டையைக்கிளப்பிய பாடல்கள் ஆகும்.
பின்னணிப்பாடகர் கேகே, கடந்த 1968-ல் நாட்டின் தலைநகர் டெல்லியில் வசித்து வந்த மலையாள குடும்பத்தில் ஆகஸ்ட் 23ஆம் தேதி(இதே நாளில்)பிறந்தவர். கடந்தாண்டு, இவர் மறைந்தாலும், இவரது பாடல்கள் தனித்துவமானவை. சாகாவரம் பெற்றவை.
அத்தகைய வசீகரக்குரலோன் கிருஷ்ணகுமார் குன்னத்துக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.

