காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தின் மோசமான நாட்களை மக்கள் மறக்கவில்லை. அதுபோன்ற அரசு அமைய மக்கள் விரும்ப மாட்டார்கள் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
நாட்டில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில் நியூஸ் 18 குழுமத்திற்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பிரத்யேக பேட்டி அளித்துள்ளனர். அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் பல விவாதங்களையும் கிளப்பியது.
அதன் தொடர்ச்சியாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நியூஸ் 18 குழுமத்தின் ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-
இது தேசிய அளவில் நடக்கக்கூடிய தேர்தல். நாட்டின் தலைவரை கவனத்தில் கொண்டு மக்கள் வாக்களிப்பார்கள். காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தின் மோசமான நாட்களை மக்கள் மறக்கவில்லை. அதுபோன்ற அரசு அமைய மக்கள் விரும்ப மாட்டார்கள். பாஜக அரசுக்கு தொலைநோக்கு திட்டங்கள் உண்டு. காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளை பார்த்தால் அவர்கள் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத பல விஷயங்களை குறிப்பிட்டுள்ளனர்.
மக்களுக்கு எது தேவையோ அதை மிக சரியாக பாஜக அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் பிரதமராக மோடி பொறுப்பு ஏற்பார். ஆனால் எதிர்க்கட்சி தரப்பில் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அங்கு தலைவராக யார் இருக்கிறார்? எதிர்க்கட்சி ஏதோ ஐந்து ஆண்டுகளுக்கு 5 பிரதமரை கொண்டு வருவதாக கூறுகிறார்கள். யார் அந்த 5 பேர். அவர்களில் யார் முதலில் பிரதமராக பொறுப்பு ஏற்பார் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.
இந்தியர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ளார். அவரது புகழுக்கு இதுவும் ஒரு காரணம். பாஜக ஆட்சி காலத்தில் சீனா இந்தியாவின் நிலத்தை அபகரிக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் தான் சீனா இந்திய நிலங்களை ஆக்கிரமித்தது. அவர்களது ஆட்சிக் காலத்தில் நடந்த போரில் இந்தியா தோல்வியடைந்தது. அப்போது இழந்த நிலங்கள் குறித்து காங்கிரஸ் கட்சிதான் பதில் சொல்ல வேண்டும்.
பாஜக ஆட்சியில் இந்தியாவின் எல்லைகள் பாதுகாப்பாக உள்ளன. இந்தியாவை தாக்க முயல்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் வீரர்களுக்கு சிறந்த வசதிகள் மற்றும் நவீன ஆயுதங்களை வழங்கியுள்ளோம். என்று கூறியுள்ளார்.
.
