Last Updated:
பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதி ஹாசிம் மூஸா உள்ளது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி ஹாசிம் மூஸா, பாகிஸ்தான் துணை ராணுவப் படையை சேர்ந்த முன்னாள் வீரர் என்ற அதிர்ச்சிகரத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 22 ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதி ஹாசிம் மூஸா உள்ளது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்பு சேவைகள் குழு எனப்படும் படையில் பாரா கமாண்டோவாக பணியாற்றியவர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அவரை காஷ்மீரில் வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்துவதற்காக பாகிஸ்தான் ராணுவத்தினரால் லஷ்கர் இ தொய்பா அமைப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த உதவியதாக சந்தேகிக்கப்படும் நபர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. இதன்மூலம் பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
இந்நிலையில், பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகள் ஏப்ரல் முதல் வாரத்திலேயே பைசரன் புல்வெளி பகுதிக்கு வந்திருப்பது தெரியவந்துள்ளது. பைசரன் புல்வெளியில் தாக்குதல் நடத்தும் முன் அங்குள்ள உணவகத்தில் தீவிரவாதிகள் இருவர் காத்திருந்ததும், அப்போது அங்கு சிற்றுண்டி சாப்பிட வந்த சுற்றுலாப் பயணிகளிடம் மதம் குறித்து விசாரித்த பிறகு துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Jammu,Jammu,Jammu and Kashmir
April 29, 2025 11:44 AM IST
பாரா கமாண்டோ… முன்னாள் வீரர்.. பஹல்காம் தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான்? – வெளியான அதிர்ச்சி தகவல்!

