Last Updated:
பாகிஸ்தான், சீனாவிடம் வாங்கிய P15E ஏவுகணையை இந்திய எல்லையில் பஞ்சாப்பில் ஏவி அத்துமீறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய பகுதியை நோக்கி ஏவுகணையை வீசி பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியது எல்லையில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவிய நிலையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய பாதுகாப்புப் படைகள் பதிலடி கொடுத்து வருகின்றன. அதன்படி நேற்று (புதன்கிழமை) நள்ளிரவு 1.44 மணிக்கு “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதலை தொடங்கிவிட்டதாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்த தாக்குதலுக்காக இந்தியா குறிவைத்த இடங்கள் மொத்தம் 9. பஹல்காம் தாக்குதல் உள்பட இந்தியாவில் தாக்குதல் நடத்தக் காரணமான தீவிரவாதிகள் செயல்படும் இடங்களை சரியாக கண்காணித்து இந்த 9 இடங்களை ராணுவம் தேர்வு செய்திருந்தது.
அதில் முதன்மையானது முரித்கே. இந்தியாவின் அமிர்த சரஸில் இருந்து 61 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் இங்கேதான் லஷ்கர் இ-தொய்பாத தீவிரவாத அமைப்பின் தலைமையகம் இருக்கிறது. இந்தியப் பகுதிக்குள் இருந்தபடி ராணுவமும், விமானப் படையும் நடத்திய தாக்குதலில் இந்த பகுதி நிலைகுலைந்தது.
இதனிடையே, இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் சந்தேகத்திற்கிடமான நபர்களை கண்டதும் சுட மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி ராஜஸ்தானை ஒட்டிய பாகிஸ்தான் எல்லையில் சந்தேகப்படுபவர்கள் இருந்தால் கண்டதும் சுட எல்லை பாதுகாப்பு படைக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்லையை முழுவதும் சீல் வைக்கப்பட்ட நிலையில் அதனை ஒட்டிய பகுதிகளில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் வாங்கிய ஏவுகணையை இந்தியா மீது ஏவி பாகிஸ்தான் அத்துமீறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி சீனாவிடம் இருந்து வாங்கிய ஏவுகணையை பஞ்சாப்பில் இந்திய எல்லையை ஒட்டிய பகுதியில் ஏவியுள்ளது. ஏவுகணையின் சிதிலமடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. P15E வகை ஏவுகணையை நேற்று இரவு பாகிஸ்தான் பகுதியில் இருந்து ஏவப்பட்டுள்ளது. சீன மொழியில் குறிப்புகளை கொண்டுள்ள இரு ஏவுகணைகள் வெடித்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
May 08, 2025 12:37 PM IST

