இந்தச் செய்தியாளர் சந்திப்பில், கர்னல் சோஃபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் கூறியதாவது; “7 மற்றும் 8 ஆம் தேதிகளில் ஏவுகணைகள் மற்றும் டிரோன் மூலம் அவந்திபுரா, ஜம்மு, அமிர்தசரஸ், பதிண்டா, ஶ்ரீ நகர் உள்ளிட்ட பல்வேறு இந்திய எல்லைப் பகுதிக்குள் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயற்சித்தது. ஆனால் இந்தியப் படைகளால் அந்த ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் தடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் பாகிஸ்தான் டிரோன்களை அனுப்பி தாக்குதல் நடத்தியது. இதில், பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள் தோற்கடிக்கப்பட்டன. இந்திய வான் பாதுகாப்பு தளவாடங்கள் பாகிஸ்தானின் டிரோன்களை இடைமறித்து அழித்தன. இந்திய நிலைகள் மீதான பாகிஸ்தான் தாக்குதல் முறியடிக்கப்பட்டது. அதன் எஞ்சிய சிதறிய பகுதிகளை சேகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்திய படைகளால், பாகிஸ்தானின் Air Defence system தகர்க்கப்பட்டுள்ளது. பூஞ்ச், ஊரி, குப்வரா உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல்களை பாகிஸ்தான் அதிகரித்துள்ளது. அதற்கு எதிர்வினையாக இந்தியா பதில் தாக்குதல்களை நடத்தியுள்ளது. அதிகபட்சமாக பஞ்சாப் மாநிலத்தில் 7 இடங்களில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சித்தது. அவை அனைத்தும் முறியடிக்கப்பட்டது. எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் நடத்தும் தாக்குதலால் 16 அப்பாவி இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்” எனத் தெரிவித்தனர்.
தொடர்ந்து பேசிய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, “இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள இந்த விவகாரம் என்பது முதலில், கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதல் உருவானது.
இந்தியா எந்த தாக்குதல்களையும் தானாக செய்யவில்லை. எந்த நாடு முதலில் தாக்குதலில் ஈடுபட்டது என்பது அனைவருக்கும் தெரியும். எந்த இராணுவப் பகுதிகளும் இந்தியாவால் தாக்கப்படவில்லை. தீவிரவாத முகாம்களை மட்டுமே தாக்கப்பட்டது. பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்பு தகர்க்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கு சரியான பதிலடி கொடுக்கப்பட்டது.
பஹல்காமில் தாக்குதல் நடத்திய டிஆர்எஃப், லக்ஷர் இ தொய்பாவின் துணை அமைப்பு. பாகிஸ்தானில் தீவிரவாதிகள் இல்லை என அந்நாட்டு அமைச்சர் தொலைக்காட்சி ஒன்றில் கூறியுள்ளார். சர்வதேச அளவில் நடைபெற்ற பல்வேறு தீவிரவாத தாக்குதல்கள் பாகிஸ்தானில் இருந்து தான் தொடங்கியது. ஒசாமா பின்லேடன் எங்கிருந்து கண்டுபிடிக்கப்பட்டார் என்பதை நான் கூறி தெரிய வேண்டிய அவசியமில்லை. மசூத் அசார் உள்ளிட்ட தீவிரவாத தலைவர்களின் புகலிடமாக பாகிஸ்தான் உள்ளது.
மும்பை 2008 தாக்குதல் மற்றும் பதான்கோட் தாக்குதல்கள் ஆகிய இரண்டிலும், முழுமையான ஒத்துழைப்பை இந்தியா வழங்கி, பாரன்சிக் தடயங்கள் மற்றும் ஆவணங்கள், கால் ரெக்கார்டுகள் உள்ளிட்ட அனைத்து தரவுகளையும் இந்தியா வழங்கியது. ஆனால், பாகிஸ்தான் நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. தீவிரவாதிகளின் முகவரிகள் மற்றும் ஜெய்ஸ் இ முகமது அமைப்பின் அலுவலக பணியாளர்கள் தகவல்கள் உள்ளிட்டவற்றையும் வழங்கினோம். ஆனால் பாகிஸ்தான் விசாரணைக்கான அனைத்து கதவுகளையும் மூடிவிட்டது.
பஹல்காம் தாக்குதலால் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்கவே தற்போது பதிலடி கொடுத்து வருகிறோம். இந்தியா நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் மட்டுமே கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. ஆனால் இந்தப் புகைப்படம் வேறு விதமான பதிலை தருகிறது (கையில் பயங்கரவாதிகள் பங்கேற்ற இறுதி சடங்கு படத்தை எடுத்து காட்டினார்). எல்லையில் இருந்து ஏராளமான உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்தியா குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக செயல்பட்டு வருவதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. ஆனால் பாகிஸ்தான் மதாலயங்களை தீவிரவாத முகாம்களின் முகப்பாக பயன்படுத்தி வருகிறது. அதனை நம்ப வேண்டாம். பதற்றத்தை தணிக்க பாகிஸ்தான் ஒத்துழைத்தால், தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
