Last Updated:
பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
நாளுக்கு நாள் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பிரச்சினை பூதாகரம் அடைந்து வரும் நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான 6 தீவிரவாதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் தப்பியோடியதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீரின் தெற்கு பகுதியான பஹல்காமில் கடந்த 22 ஆம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும் மாறி மாறி பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து பரஸ்பர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், தரையில் இருந்து ஏவப்பட்டு தரையில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணையை பாகிஸ்தான் சோதித்து பார்த்துள்ளது. ஏறத்தாழ 450 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று அணு ஆயுதத்தை தாக்கி அழிக்கும் செயல்திறன் கொண்ட ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சென்னையில் இருந்து இலங்கை சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதிகள் தப்பிச் சென்றதாக தகவல் வெளியானது. இந்திய உளவுத்துறை தகவலின்பேரில் கொழும்பில் உள்ள பண்டார நாயகே விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர்.
அதேநேரம், சென்னையில் இருந்து கொழும்பு சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பாதுகாப்பு படை நடத்திய சோதனையில் தீவிரவாதிகள் யாரும் சிக்கவில்லை. சோதனைக்கு பின் விமானம் சிங்கப்பூருக்கு தாமதமாக புறப்பட்டுச் சென்றதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு வெளியிட்டது.
மேலும் சென்னை கட்டுப்பாட்டு அறையில் இருந்து வந்த தகவல் அடிப்படையில் பாதுகப்புப் படையினர் சோதனை மேற்கொண்டதாகவும், இதனால் சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம் ஆகியுள்ளதாகவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதையடுத்து சென்னை விமான நிலையத்திலும் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். அதைத் தொடர்ந்து சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு, இந்திய உளவு அமைப்புக்கு ஒருவர் அனுப்பிய இமெயிலில், விமானத்தில் பஹ்லகாம் தாக்குதல் தீவிரவாதிகள் இலங்கை தப்பிச் சென்றதாக தவறான தகவல் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பஹல்காம் துப்பாக்கி சூட்டில் தொடர்புடைய 2 இந்தியர்கள் உள்ளிட்ட 6 தீவிரவாதிகள் இந்தியா – பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியான நீலம் பள்ளத்தாக்கு வழியே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் தப்பியோடியதாக தகவல் வெளியானது. கடந்த 2016 ஊரி தாக்குதல் மற்றும் 2019 புல்வாமா தாக்குதல்களின் போது, நீலம் பள்ளத்தாக்கு மற்றும் அதன் அருகே உள்ள லீபா பள்ளத்தாக்கு வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவியதாக தகவல் கூறப்படுகிறது.
இந்நிலையில், டெல்லியில் பிரதமர் மோடியை ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அபதுல்லா சந்தித்தார். பஹல்காம் தாக்குதலுக்கு பின் முதல் முறையாக பிரதமர் மோடியை சந்தித்த உமர் அப்துல்லா, காஷ்மீரின் பாதுகாப்பு விவகாரம், பயங்கரவாதிகளுக்கு எதிராக மேற்கொண்டுள்ள நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடியுடன் அரை மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார்.
Jammu and Kashmir
May 04, 2025 11:36 AM IST

