தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில் இப்போதே `ஓரணியில் தமிழ்நாடு” என்ற பெயரில் முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின்பேரில் மாநிலம் முழுவதும் வீடு வீடாகச் சென்று உறுப்பினர்களைச் சேர்க்கும் வேலையில் இறங்கியிருக்கிறது தி.மு.க.
இது ஒரு அரசியல் கட்சியின் தேர்தல் வேலை என்றாலும், மக்களிடம் ஆன்லைனில் வாக்காளர் அடையாள அட்டை அப்டேட் செய்கிறோம் உள்ளிட்ட எதாவது காரணத்தைச் சொல்லி செல்போன் நம்பரை வாங்கி பின்னர் ஓ.டி.பி (OTP) பெற்று அவர்களின் அனுமதியின்றி தி.மு.க-வில் உறுப்பினராகச் சேர்க்கும் வேலையில் தி.மு.க-வினர் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக எழுந்தன.

இதற்கெதிராக, சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த ராஜ்குமார், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கும் தொடுத்தார்.
அந்த மனுவில், “மக்களின் ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, அலைபேசி எண் உள்ளிட்டவற்றைப் பெற்று தி.மு.க-வில் சேர்த்து வருகின்றனர்.
அவற்றைத் தர மறுத்தால், மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல திட்டங்கள் நிறுத்தப்படும்’ என அச்சுறுத்துகின்றனர்.
அரசியல் பிரசாரத்துக்காக தனிப்பட்ட தகவல்களைப் பெறுவது, அரசியலமைப்பு வழங்கும் சுதந்திரம் மற்றும் தனி உரிமையை மீறும் செயல்.
எனவே இதனை விசாரித்து தி.மு.க மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ராஜ்குமார் குறிப்பிட்டிருந்தார்.
