
மதுரை: காவிரியில் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்காததால் குறுவை சாகுபடி விவசாயிக்கு முழு நிவாரணம் அரசு வழங்கவேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.
மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக அவர் இன்று மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ”தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு அரசு ஒதுக்கிய நிதியை மகளிர் உரிமைத் தொகைக்கு மாற்றி வழங்கினால் அது தவறு. சட்டப்படி குற்றம். தஞ்சையில் குறுவை நெல் சாகுபடி பயிர்கள் கருகுகின்றன. அதற்கு முழு காரணம் தற்போதைய திமுக அரசு தான். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படியும், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி, நமக்கு வழங்க வேண்டிய 16 டிஎம்சி, 32 டிஎம்சி நீரை ஜூன், ஜூலையில் கர்நாடகா அணையிலிருந்து விடுவிக்கவில்லை. இதன் காரணமாக தஞ்சை பகுதியில் பயிர்கள் கருகிப் போகும் சூழல் இருக்கிறது. இதற்கு அரசு பொறுப்பேற்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழு நிவாரணம் வழங்கவேண்டும்.

