Last Updated:
மத்திய அரசு ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 12 வரை மழைக்கால கூட்டத்தொடரை அறிவித்துள்ளது. பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து கடுமையான விவாதங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
இந்திய நாடாளுமன்றம் வருடத்திற்கு மூன்று முறை கூடுவது வழக்கம். அந்த வகையில், பிப்ரவரி மாதம் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர், ஜூலை – ஆகஸ்ட் மாதங்களில் மழைக்கால கூட்டத்தொடர் துவங்கி நடைபெறும். அதன் பின் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் – டிசம்பர் மாதங்களில் நடைபெறும்.
இதன்படி தற்போது ஜூலை மாதம் 21 முதல் ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த ஒன்பது பயங்கரவாத முகாம்களைத் தாக்கி அழித்தது.
இதன்பிறகு இரு நாட்டுக்கும் இடையே சண்டை மூண்டது. இதில், பாகிஸ்தானின் டிரோன்கள் தாக்கி அழிக்கப்பட்டன. அதேபோல், இந்தியாவின் விமானங்கள் அழிக்கப்பட்டதாக முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுஹான் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
முன்னதாக இந்த விவகாரம் குறித்து விவாதிக்கவும், நாட்டு மக்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம் அளிக்கவும் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரைக் கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், மத்திய அரசு சிறப்பு கூட்டத்தைக் கூட்டவில்லை. இந்நிலையில் தற்போது மழைக்கால கூட்டத்தொடர் குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பத் தயாராகி வருகின்றன. இருந்தாலும், பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து கடுமையான விவாதங்கள் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
June 04, 2025 3:05 PM IST
சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தைக் கேட்ட எதிர்க்கட்சிகள்.. மழைக்கால கூட்டத்தொடரை அறிவித்த மத்திய அரசு

