Chennai oi-Mani Singh S
Updated: Tuesday, June 13, 2023, 20:59 [IST]
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சர் அறையிலும் இந்த சோதனை நடைபெற்றது. அமலாக்கத்துறை சோதனைக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடியாக சோதனை நடத்தினர். சென்னையில் உள்ள அமைச்சரின் அரசு இல்லம், ஆர்.ஏ.புரம், அபிராமபுரத்தில் உள்ள இல்லங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. கடந்த வாரத்தில் தான் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்ற நிலையில், இன்று நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை தமிழகத்தையே உலுக்கியது. இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனைக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து மல்லிகார்ஜூன் கார்கே கூறுகையில், “எதிர்க்கட்சி தலைவர்களை விசாரணை அமைப்புகள் மூலம் மோடி அரசு அச்சுறுத்தி வருகிறது. விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளை ஒடுக்கிவிடலாம் என மோடி அரசு நினைக்கிறது” என்று தெரிவித்துள்ளார். அதே போல், மேற்கு வங்காள முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியும் செந்தில் பாலாஜி வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மம்தா பானர்ஜி கூறுகையில், ” விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது. திமுக அரசுக்கு எதிரான பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. விசாரணை அமைப்புகளை பாஜக அரசு தவறாக பயன்படுத்துவது நீடித்து வருகிறது. தமிழ்நாட்டில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரின் அலுவலகம் மற்றும் அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது” இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதேபோல் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “மத்திய விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை பாஜக தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை சோதனைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை மூலம் ஜனநாயகத்திற்கு பாஜக கேடு விளைவிக்கிறது” என்று தெரிவித்தார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனைக்கு சரத்பவாரும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சரத்பவார் கூறுகையில், “எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அமலாக்கத்துறை நடத்தி வரும் தொடர் நடவடிக்கைகளுக்கு நான் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். செந்தில் பாலாஜி அலுவலகத்தில் நடைபெறும் சோதனைகள் மூலம், தென் மாநிலங்களை அமலாக்கத்துறை பழிவாங்க தொடங்கியுள்ளது” என்று கூறியுள்ளார். செந்தில் பாலாஜி விவகாரம்: தலைமைச் செயலகத்தில் அமலாக்கத்துறை ரெய்டு- திமுக அரசை மிரட்டுறீங்களோ? வைகோ
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற
Allow Notifications
You have already subscribed English summary
The enforcement department conducted raids today at the premises owned by Minister Senthil Balaji. The inspection was also conducted in the Minister’s room in the Chief Secretariat. The Congress party strongly condemned the enforcement department’s raid.

